மைத்திரியைக் கொலைசெய்ய சூழ்ச்சி: விசேட விசாரணை கோருகின்றது சு.க.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்வதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள தகவல் குறித்து உடனடியாக விசேட விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதியையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலைசெய்வதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினாலேயே பிரதிப் பொலிஸ்மா அதிபரின் குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசியல் பிரமுகர்கள் பலகோணங்களில் கருத்துக் களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விசேட விசாரணை அவசியம் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்பிரியதாஸ தெரிவித்தார்.
“இதை சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது. விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். விசாரணைகளின் முடிவின் பின்னரே இதன் பின்னணி குறித்து அறிய முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.