போர்க்குற்றங்களில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசு வகுக்கும் புதிய வியூகம்!
“ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் முடிவுற்ற போரின்போது அரச படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புகளினாலும் இழைக்கப்பட்டவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் அனைத்தையும் ஒரேயடியாக மறந்து, பொதுமன்னிப்பளித்து, இரு தரப்புக்களையுமே முழுமையாக விடுவிப்பதன் மூலம் நாட்டில் புதிய கண்ணோட்டத்தில் நல்லிணக்கத்தையும், இன ஒற்றுமையையும் கட்டிக் காப்போம்.”
– இவ்வாறு பகிரங்க அழைப்பு ஒன்றை விடுவிப்பதன் மூலம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து அரச படையினரை முழுமையாக விடுவிக்கும் முயற்சியில் இலங்கை அரசுத் தரப்பு முனைப்புடன் ஈடுபட்டிருக்கின்றது என அறியவருகின்றது.
இதேசமயம், அரசு தரப்பின் இந்த நிலைப்பாட்டை ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாகப் பிரதிபலித்திருந்தார்.
“நாட்டுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய பன்னீராயிரம் விடுதலைப் புலிகள், போர் முடிந்த கையோடு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்படியிருக்க, சட்டத்தை மீறினர் என்று பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக மட்டும் விசாரணைகள் பாய்கின்றமையையும், சட்டம் பிரயோகிக்கப்படுகின்றமையையும் தவறானது என மக்கள் கருதுகின்றார்கள். மக்கள் மத்தியில் இது தொடர்பில் கடும் விசனம் எழுந்துள்ளது. விடுதலைப்புலிகளைப் போல, படையினரையும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்ட தமிழ்க் குழுவினரையும் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும். அதேசமயம், போர்க்காலத்தில் தனிப்பட்ட நோக்கங்களுக்காக போர் சூழலைப் பயன்படுத்தி போர்க்குற்றங்கள், அராஜகங்கள் புரிந்தோரைக் கண்டுபிடிக்க விசேட குழுக்கள் மூலம் ஆய்ந்தறிந்து நடவடிக்கை எடுக்கலாம்” என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இரு தரப்பினருக்கும் ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பும் விடுதலையும் அளித்து பிரகடனம் ஒன்றை வெளியிடுவதன் மூலம், போர்க் காலக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதுகின்றார் எனக் கூறப்படுகின்றது.
எதிர்வரும் 25ஆம் திகதி ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றும்போது இந்த யோசனைத் திட்டத்தையே அவர் முன்வைத்து, தமது அந்த உத்தேசத் திட்டத்துக்கு முழு உலகமும் ஆதரவு தரவேண்டும் என அவர் கோருவார் எனக் கூறப்படுகின்றது.
அப்படி எல்லாத் தரப்புகளையும் மன்னித்து, விடுவித்து விட்டால் அந்தத் தரப்புகளுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவிழந்து விடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கின்றார் என்றும் கூறப்பட்டது.
அவரது அந்த யோசனைத் திட்டத்துக்கு உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பிரதிபலிப்பு எவ்வாறாக அமையும் என்பது இனி இனித்தான் தெரியவரும் என்று கூறப்பட்டது.