தூக்கில் தொங்கிய நிலையில் இளம் ஆசிரியர் சடலமாக மீட்பு! – காத்தான்குடிப் பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சிச் கலாசாலையில் ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம். பிரதீப் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியர் தாளங்குடா ஆசிரியர் பயிற்சிச் கலாசாலையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான முதலாம் பிரிவில் இணைந்தார். இவர் இன்று வழமை போல கலாசாலையில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் முற்பகல் 11 மணிக்கு விடப்பட்ட இடைவேளையில் விடுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் விடுதியிலுள்ள மின்சார விசிறியில் கயிற்றால் பிணைக்கப்பட்ட தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாளங்குடா ஆசிரியர் பயிற்சிச் கலாசாலை நிர்வாகத்தினர் இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.
இவர் காதல் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார் எனப் பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான தீவிர விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.