கொக்குவில் தேடுதல் வேட்டையில் மூவர் சிக்கினர்!
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்துள்ளனர் எனப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணியினரால் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கைக் குழப்புவோரைக் கைது செய்யும் நோக்கோடு, கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில், இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
அத்தோடு பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில், இனம் காணப்பட்ட வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, சந்தேகமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்களிடம் சாரதி அனுமதிப் பத்திரம், அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் தொடர்பில் சுற்றிவளைப்பின்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடர்பாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் சில இடம்பெற்றிருந்தன. இவற்றுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் சிலர் கோகுவில் பகுதியில் மறைத்திருப்பதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இதற்கமைவாகவே இந்தத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் 21 அடையாளப்படுத்தப்பட பகுதிகளில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக 250 பொலிஸார் பயன்படுத்தப்பட்டிருந்தனர்” – என்றார்.