உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்! – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து
யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இழப்பீடுகள் தொடர்பான அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மோதல்கள் இடம்பெற்றபோது ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். யுத்த நிலைமைகளின் பின்னர் நாம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும்.
ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நடவடிக்கைகள் பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. இழப்பீடுகள் குறித்த அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் நிலையில் அவை அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன” – என்றார்.