பாகிஸ்தானையும் உலுக்குமா #MeToo
இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பெண்கள் #MeToo என்ற ஹாஷ்டாக் மூலம் தங்கள் எதிர்கொண்ட பாலியல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #MeToo இயக்கம் பாகிஸ்தானிலும் அடியெடுத்து வைத்துள்ளது.
சமூக ஊடகங்கள், அரசியல், திரைப்படத் துறை, பத்திரிகைத் துறை என பல துறைகளிலும் உள்ள இந்திய பிரமுகர்கள், பிரபலங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பலரும் வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் வரை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
சமீபத்தில் ட்விட்டரில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சில பாகிஸ்தானிய பெண்கள், சில பிரபலங்கள் தங்களிடம் ரீதியாக முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினர்.
இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானிலும் பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்ட வைக்கப்படுமா? இதுபோன்ற விவகாரங்களில் பாகிஸ்தான் பெண்களின் நிலைப்பாடு இதுவரை எப்படி இருந்திருக்கிறது?
பாகிஸ்தான் பத்திரிகையாளர் சபாஹத் ஜகாரியாவின் கருத்தப்படி, “பாகிஸ்தானில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதே சிரமமானது என்ற நிலையில், பணி தொடர்பாக பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற விஷயங்கள் வெளிவந்தால் அவர்கள் வேலைக்கு போவதற்கும் தடை ஏற்படலாம்”.
“இங்கு அதிகாரம் என்பது சிலரின் கைகளுக்குள் இருக்கிறது. அவர்கள் ஒருவருடன் மற்றொருவர் ஏதாவது ஒருவிதத்தில் தொடர்பு கொண்டிருப்பதால், முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் அழுத்தப்பட்டு, நீர்த்து போக செய்யப்படும். எனவே, பாகிஸ்தான் பிரபலங்களுக்கு #MeToo எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது.”
“இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பவரும் அதிகாரம் மிக்க ஒருவராகவோ அல்லது பிரபலமானவராக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பயனேதும் இருக்காது. ஆனால் அவர்களும் குரல் எழுப்புவார்களா என்பது சந்தேகமே” என்கிறார் சபாஹத் ஜகாரியா.