சுருதி மாற்றிவிட்டார் சம்பந்தன்! – சுரேஷ் சீற்றம்
“தமிழ் மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு இரா.சம்பந்தனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று அவர்களை ஆதரித்துப் பேசிய சம்பந்தனின் சுருதி தற்போது மாறியுள்ளது.”
– இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எபவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றிருக்கக்கூடாது என நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ஆனால், முன்னர் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரித்து பேசிய அவரின் சுருதி இப்போது மாறியுள்ளது.
தற்போது அரசுடன் பேசுவதாக இருந்தாலும் சரி ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் பேசுவதாக இருந்தாலும் சரி, சர்வதேசத்துடன் பேசுவதாக இருந்தாலும் சரி விடுதலைப் போரட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் ஏறி நின்றே பேச முடியும். பல்லாயிரம் இளைஞர்கள் இந்தப் போரட்டதுக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். ஆகவே போராட்டத்தைக் கொச்சைப்படுத்த இவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.
இரா.சம்பந்தன் போராட்டம் ஒன்றில் கைதுசெய்யப்பட்டு பனாங்கொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டபோது, இனிமேல் இப்படியான போரட்டங்களில் ஈடுபடமாட்டேன் என முதலாவதாகக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தவர். ஆகவே, இவர்களுக்கு அகிம்ஷைப் போராட்ட வரலாறும் இல்லை. ஆயுதப் போராட்டத்துக்கு அண்மையிலும் இவர்கள் வரவில்லை. இந்நிலையில் இப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்த இவர்களுக்கு உரிமை இல்லை” – என்றார்.