மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஐ.தே.க., கூட்டமைப்பு, ஜே.வி.பி. இணைந்து இடைக்கால அரசு!! – பேச்சுகள் தீவிரம்
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உத்தேசித்து வருகின்றனர் எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியுடன் இது குறித்த தீர்மானிக்க ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இரகசியப் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அந்தத் தகவலிலிருந்து அறியமுடிகின்றது.
இந்த இடைக்கால அரசு திட்டம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி உறுப்பினர்களை ரணில் பக்கம் வளைப்பதற்காக தற்போது இரசியப் பேச்சில் ஈடுபட்டுவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடனும் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர் என்று அந்தத் தகவலிலிருந்து மேலும் தெரியவருகின்றது.
எவ்வாறாயினும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., மைத்திரி – மஹிந்த தலைமையிலான அணிக்கும், ரணில் தலைமையிலான அணிக்கும் தமது ஆதரவை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனவும், அரசியல் குழப்பத்துக்கு முடிவு காண நாடாளுமன்றத்தை சபாநாயகர் உடன் கூட்ட வேண்டும் எனவும் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.