மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு! – காங்கிரஸிடமிருந்து வந்தது கடும் எச்சரிக்கைக் கடிதம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படலாம் என அமெரிக்கா தனது கடிதத்தில் கடுமையாக எச்சரித்துள்ளது.
அமெரிக்கக் காங்கிரஸ் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சலினால், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் காங்கிரஸ் சபையின் மூன்று பிரதிநிதிகள் இந்தக் கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“உங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தை இடைநிறுத்திப் பிரதமரை அரசமைப்புக்கு முரணான விதத்தில் நீக்கிய உங்கள் நடவடிக்கை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தீர்வைக் காணுமாறும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
2015 இல் நீங்கள் தெரிவு செய்யப்பட்டமை இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தம் பொறுப்புக் கூறப்படுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியது. நல்லிணக்க செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான உங்கள் அரசின் நடவடிக்கைகளும் அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இலங்கையில் ஜனநாயக ஆட்சிக்கான புதிய சமிக்ஞையை வெளிப்படுத்தின.
இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலாக அமெரிக்கா இலங்கையுடனான உறவுகளில் முதலீடு செய்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், துரதிஷ்டவசமாகச் சமீபத்தைய நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால் உங்கள் நாட்டின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் அண்மைய வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.
அண்மைய நடவடிக்கைகள் இலங்கையில் அரசியல் நெருக்கடியை உண்டுபண்ணியுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய இரத்தக்களறி அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார். இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் எம்.சி.சி. திட்டத்துக்கும், அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிக்கும் அமெரிக்காவின் ஏனைய திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இலங்கை – அமெரிக்க உறவுகள் நல்லாட்சி ஜனநாயக விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பு என்ற பகிரப்பட்ட இலக்குகளில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாடாளுமன்றம் தலையீடுகளின்றித் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனுமதிப்பதன் மூலம் இந்த விழுமியங்களிற்கான உங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.