நீடிக்கிறது அரசியல் குழப்பம் – பதவி துறந்த வசந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பு!
அமைச்சுப் பதவியை துறந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார் என அறிவிக்கப்பட்ட வசந்த சேனாநாயக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியகையோடு, மஹிந்தவை ஆதரித்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டார் வசந்த சேனாநாயக்க.
எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி பிரதர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் மீண்டும் ஐ.தே.கவில் இணையவுள்ளதாக அறிவித்தார். அமைச்சுப் பதவியை துறக்கும் அறிவிப்பையும் விடுத்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மஹிந்தவின் அமைச்சரவையிலிருந்து மைத்திரி வெளியேறிய பின்னர், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வசந்த சேனாநாயக்கவும் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.