கூட்டமைப்பு – ரணில் இன்று முக்கிய பேச்சு!
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கும் (இறுதி வாக்கெடுப்பு) ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூட்டமைப்பிடம் கோரவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் திரைமறைவில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வரும் நிலையில், கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்குத் தேவையாகவுள்ளது.
இந்தநிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை பிரதமர் ரணில் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.