தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்! – வரலாறு தெரியாமல் உளறாதீர்; மைத்திரிக்கு சுமந்திரன் சாட்டையடி
“போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் நடந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். வரலாறு தெரியாமல் உளறுதல் சரியல்ல.”
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மேல் மாகாண மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி, பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு ஆயுதங்களை வாங்கிப் போராட்டத்தை நடத்தினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டு அதற்குப் பதிலளித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியதாவது:-
“பிரபாகரன் நடத்திய ஆயுதப் போராட்டத்துக்குத் தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்குப் பெருமளவான நிதிப் பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் வரலாறு தெரியாமல் உளறி இப்படி ஜனாதிபதி கூறுவது முற்றுமுழுதான தவறு. அதனை நான் கண்டிக்கின்றேன். இது ஒட்டுமொத்த தமிழரின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல். இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னெப்போதும் இருந்ததில்லை” – என்றார்.