இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை?
உலகம் முழுவதும் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை நடைமுறை குறித்த முன்னோட்டத் திட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிறுவனங்கள் அதை வழக்கமாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
4 Day Week Global எனும் லாப நோக்கமில்லா நிறுவனமும் சில பல்கலைக்கழகங்களும் 6 மாதங்களுக்கு அதைச் சோதித்துப் பார்த்தன.
அமெரிக்கா, அயர்லந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 33 நிறுவனங்களின் 903 ஊழியர்கள் அதில் பங்கேற்றனர்.
அது குறித்த கருத்தாய்வில் பங்கேற்ற 27 நிறுவனங்கள் அனைத்துமே மீண்டும் 5 நாள் வேலை நடைமுறையைச் செயல்படுத்த எண்ணமில்லை என கூறப்படுகின்றது.
பதிலளித்த 495 ஊழியர்களில் 97 சதவீதமானோர் 4 நாட்கள் வேலை நடைமுறையைத் தொடங்க விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறினர்.
வேலைப் பளு அதிகரித்ததாகப் பெரும்பாலான ஊழியர்கள் குறிப்பிடவில்லை. மன உளைச்சல், சோர்வு, தூக்கமின்மை முதலிய பிரச்சினைகள் குறைந்துள்ளதாகவும் உடல்நிலையும் மனநிலையும் மேம்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
முன்னோட்டத் திட்டத்தின்போது நிறுவனங்களின் சராசரி வருவாய் 38 சதவீதம் அதிகரித்ததும் கருத்தாய்வில் தெரியவந்தது.
வாரத்துக்கு 4 நாள் வேலை நடைமுறை குறித்து பிரித்தானியாவில் முன்னோட்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் முடிவுகள் பெப்ரவரியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது