நெற்றிப்பொட்டின் இரகசியம்!
வட்டம், நீள்வட்டம், திலகம் என பல வடிவங்கள், அளவுகள் மற்றும் நிறங்களில் நெற்றிப்பொட்டு வைப்பது பெண்களின் வழக்கம். அதை முக அமைப்புக்கு ஏற்ற விதத்தில் தேர்ந்தெடுத்தால், அழகை மேம்படுத்திக் காட்டும்.
உங்களுக்கு பொருத்தமான நெற்றிப்பொட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான சில குறிப்புகள் இங்கே…
வட்டமான முகம் கொண்ட பெண்கள், பெரிய வட்ட வடிவ நெற்றிப்பொட்டுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை உங்கள் முகத்தை மேலும் வட்டமானதாகக் காட்டும். நீண்ட திலக வடிவம் அல்லது சிறிய வட்ட வடிவ நெற்றிப்பொட்டு உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
நெற்றியில்
இதய வடிவ முகம் கொண்ட பெண்களுக்கு நெற்றி மற்றும் கன்னப்பகுதி அகலமாகவும், தாடைப் பகுதி குறுகலாகவும் இருக்கும். இவர்கள் பெரிய அளவு நெற்றிப்பொட்டுகளைத் தவிர்க்கலாம். சிறிய மற்றும் எளிமையான வட்டவடிவ நெற்றிப்பொட்டுகள் இவர்களின் முக அழகை அதிகரிக்கும்.
டயமண்ட் என்று சொல்லக்கூடிய வைர வடிவ முக அமைப்பு கொண்ட பெண்களின் நெற்றிப்பகுதி சிறியதாகவும், கன்னங்கள் அளவாகவும், தாடைப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். இவர்களுக்கு எல்லா வடிவ நெற்றிப்பொட்டுகளும் ஏற்றவை. ஆனாலும், நீள வடிவங்களைக் காட்டிலும், வட்டவடிவ நெற்றிப்பொட்டுகள் இவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
நீள்வட்ட வடிவ முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு நெற்றி மற்றும் கன்னங்கள் சம அளவோடும், தாடைப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். இவர்களுக்கு எல்லா வடிவ பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும். அதே சமயத்தில் வட்ட வடிவ நெற்றிப்பொட்டுகள் முகத்துக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
நெற்றி, கன்னம் மற்றும் தாடைப்பகுதி ஒரே அளவில் இருக்கும் பெண்களின் முகம் சதுர வடிவத்தில் இருக்கும். வலுவான கன்னங்கள் மற்றும் பரந்த தாடை அமைப்பு கொண்ட இவர்களுக்கு, வட்ட வடிவ நெற்றிப்பொட்டு ஏற்றதாக இருக்கும். பிறை வடிவ நெற்றிப்பொட்டுகளையும் இவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பொதுவான குறிப்புகள்:
நீங்கள் அணியும் ஆடை மற்றும் உங்கள் தலை அலங்காரத்துக்கு ஏற்றவாறு நெற்றிப்பொட்டுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
பெரிய விழிகளைக் கொண்ட பெண்கள், அலங்காரமான நெற்றிப்பொட்டுகளை வைக்கலாம். இதனால் பார்ப்பவர்களின் கவனம், உங்கள் கண்களைத் தவிர்த்து நெற்றிப்பொட்டின் மீது செல்லும்.
அகலமான தாடைப்பகுதி கொண்ட பெண்கள், பெரிய அளவு நெற்றிப்பொட்டு வைக்கும்போது முகத்தின் அளவு சமமாகத் தெரியும்.
மேற்கத்திய பாணி உடைகள் அணியும்போது, எளிமையான சிறிய வட்ட வடிவ நெற்றிப்பொட்டு சிறந்த தேர்வாக இருக்கும்