பூமியில் முதல் உயிரினம் தோன்றிய போது என்ன நடந்தது?
ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவுக் கூட்டம், பூமியின் மிகப் பெரும் மர்மத்தைக் கட்டவிழ்க்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கார்வெல்லாக் தீவுகள், சுமார் 720 மில்லியன் (72 கோடி ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்பு பூமி மிகப் பெரிய பனியுகத்தில் நுழைந்தது என்பதற்கான மிகச் சிறந்த சான்றுகளைக் கொண்டுள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முதல் விலங்கு இந்தப் பூமியில் தோன்றிய பின்னர், 80 மில்லியன் ஆண்டுகளுக்கு (8 கோடி ஆண்டுகள்) முன்பு கிட்டத்தட்ட முழு உலகையும் இரு தொகுதிகளாக உறைபனி சூழ்ந்திருந்தது. அது பூமியை “பனிப்பந்து” (snowball earth) என அழைக்கக் கூடிய வகையில் இருந்துள்ளது.
பாறைகளில் மறைந்திருக்கும் உறைபனி குறித்த தடயங்கள், கார்வெல்லாக் தீவுகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அழிந்துவிட்டன. பூமி நீண்டகாலமாக ஏன் அத்தகைய உச்சகட்ட உறைபனி நிலையை அடைந்தது, சிக்கலான உயிரினங்களின் தோற்றத்திற்கு அந்த நிலை ஏன் முக்கியம் என்பதற்கான விடைகளை இந்தத் தீவுகள் தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பாறையின் அடுக்குகளை வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களாகக் கருதலாம். ஒவ்வோர் அடுக்கும் வெகு காலத்திற்கு முன்பு பூமியின் சூழல் குறித்த விவரங்களைக் கொண்டிருக்கும்.
பாறை அடுக்குகள் மிகப்பெரும் உறைபனியால் அரித்துச் செல்லப்பட்டதால், பூமி ஒரு பனிப்பந்தாக மாறுவதற்கு வழிவகுத்த முக்கியமான காலகட்டம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்தது.
லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின்படி, உறைபனி அரிப்பிலிருந்து கார்வெல்லாக் தீவுகள் தப்பித்ததாகத் தெரிய வந்துள்ளது.
வரலாற்றில் பூமி எப்படி மிகவும் அழிவுகரமான ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது? நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பந்து உருகியபோது, முதல் உயிரினம் தோன்றியபோது என்ன நடந்தது என்பதற்கான விரிவான சான்றுகளை பூமியில் கொண்டுள்ள ஒரேயொரு இடமாக கார்வெல்லாக் தீவுக் கூட்டம் இருக்கக்கூடும்.
கண்டங்கள் காலப்போக்கில் நகர்ந்ததால், ஸ்காட்லாந்து அந்தக் காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட இடத்தில் இருந்திருக்கும். ஸ்காட்லாந்து பூமியின் பூமத்திய ரேகைக்குத் தெற்கே இருந்தது. மேலும், ஸ்காட்லாந்து உட்பட பூமி முழுவதும் உறைபனியால் சூழப்படுவதற்கு முன்புவரை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டிருந்தது.
“கார்வெல்லாக் தீவுகளில் உள்ள பாறைகளின் அடுக்குகளில், உலகின் மற்ற பகுதிகளில் பனிப்பாறை அரிப்பு காரணமாகக் காண முடியாத முக்கியமான பல மில்லியன் ஆண்டுகள் குறித்த தகவல்கள் உள்ளன.”
இங்கு முக்கியத் தீவு ஒன்றில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு தவிர, ஸ்காட்லாந்தின் இன்னர் ஹெப்ரைடுகள் (தீவுக் கூட்டம்) மக்கள் வாழாத இடமாகும். மேலும், செல்டிக் இனக் குழுவின் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடாலயத்தின் இடிபாடுகளும் அங்குள்ளன.
இந்த முக்கியமான கண்டுபிடிப்பை பேராசிரியர் ஷீல்டின் பிஹெச்.டி ஆய்வு மாணவர் எலியாஸ் ரூகென் நிகழ்த்தினார். அவருடைய ஆய்வு முடிவுகள், ஜியோலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் லண்டன் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
அந்தப் பாறைகளுடைய அடுக்குகளின் காலத்தை முதன்முதலில் கண்டறிந்து, அவை உலகின் எந்தப் பகுதியிலுள்ள பாறை அடுக்குகளிலும் காணக் கிடைக்காத முக்கியமான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை எலியாஸ் முதன்முதலில் கண்டறிந்தார்.
அவருடைய கண்டுபிடிப்பால் கார்வெல்லாக் தீவுகளுக்கு அறிவியல் உலகில் முக்கியமான இடம் கிடைக்கவுள்ளது.
பூமியையே மாற்றக்கூடிய புவியியல் ரீதியிலான தருணங்களுக்கான முக்கியமான சான்றுகளைக் கொண்டிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பொருத்தப்படும் பெரிய தங்க ஆணி (golden spike) இங்கு பொருத்தப்பட வாய்ப்புள்ளது. திருடர்களைத் தடுக்கும் விதமாக பொருத்தப்படும் இந்த ஆணி, உண்மையில் தங்கத்தால் ஆனது அல்ல.
இதைப் பொருத்துவதற்காக, தன் கண்டுபிடிப்பைக் காட்டுவதற்கு “கிரையோஜெனியன் துணை ஆணைய” உறுப்பினர்களை அவ்விடத்திற்கு எலியாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.
அடுத்த கட்டமாக, பரவலான புவியியல் சமூகத்தில் இதற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது இதைவிட சிறப்பான சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்த அனுமதிப்பார்கள். ஏதும் இல்லையென்றால், அவ்விடத்தில் தங்க ஆணி அடுத்த ஆண்டு பொருத்தப்படும்.
இதனால் அவ்விடத்தின் அறிவியல் தரம் உயர்த்தப்பட்டு, ஆய்வுக்கு மேலும் நிதி கிடைக்கும்.
அப்படி நிகழ்ந்தால், இளம் ஆராய்ச்சியாளராக 60 ஆண்டுகளுக்கு முன்பு இதன் முக்கியத்துவத்தை முதன்முதலாக அடையாளப்படுத்திய டாக்டர் டோனி ஸ்பென்சருக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
“தங்க ஆணியைப் பொருத்துவதற்காகத் தேர்ந்தெடுக்க சுமார் 50 இடங்கள் உள்ளன,” என பிபிசியிடம் தெரிவித்த அவர், “ஆனால் இங்குதான் பாறைகள் தடிமனாகவும், வண்டல் மிகவும் தொடர்ச்சியாகவும் இருக்கும்,” என்றார்.
எனவே “குறிப்பிட்ட பனி யுகத்தின்போது அறியப்பட்ட காலத்தின் ஆரம்பப் புள்ளியை அந்த இடம் பாதுகாத்ததாகத் தெரிகிறது.”
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.