100 சகோதரர்கள் கொலை, அந்தப்புர பெண்கள் எரிப்பு – பேரரசர் அசோகரின் அறியப்படாத மறுபக்கம்
தனது 40 ஆண்டுகால ஆட்சியில் ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர் என்று அசோகரை பற்றிப் பெருமையாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும் குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது.
அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களைக் கொண்டிருந்த ஒரு மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் அவர் வெற்றி பெற்றார். அவர் அறிமுகப்படுத்திய தார்மீகக் கருத்துகளின் தாக்கம் இன்று வரை காணக் கிடைக்கிறது.
சார்ல்ஸ் எலன் தனது ‘Ashoka: The Search for India’s Lost Emperor’ என்ற நூலில், “இந்தியாவின் ஸ்தாபகத் தந்தை என்று அசோகரை நிச்சயமாக அழைக்கலாம்,” என்று எழுதுகிறார்.
அசோகர் பலருக்கு வெவ்வேறு வடிவங்களில் தோற்றமளிக்கிறார்.
போரின் பயங்கரத்தைக் கண்டு வெற்றியைக் கைவிட்ட வெற்றியாளர் அவர். ஒரு முனிவர் என்றும் அவரைச் சொல்லலாம். முனிவர் மற்றும் சக்கரவர்த்தியின் அற்புதமான கலவை என்றும் அவரை வர்ணிக்கலாம்.
மனித விழுமியங்களை ஆழமாகப் புரிந்து கொண்ட அரசியல் மேதை அவர்.
நவீன இந்தியாவின் பிரதானமான வரலாற்று ஆசிரியரான ரொமிலா தாப்பர், தனது ‘அசோகா அண்ட் தி டிக்ளைன் ஆஃப் மெளரியாஸ்’ என்ற நூலில், ”அசோகர் தனது காலத்தைப் பல வழிகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர், தான் வாழ்ந்த காலத்தை நன்கு புரிந்துகொண்டு, இந்திய சூழலில் அதன் தேவைகளை நிறைவேற்றியதுதான் அவரது செய்த மிகப்பெரிய சாதனை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அசோகப் பேரரசரின் கதை அவரது தாத்தா சந்திரகுப்த மௌரியர் மற்றும் மகதத்தின் சிம்மாசனத்தில் அவரை அமர்த்திய சாணக்கியர் ஆகியோரிடம் இருந்து துவங்குகிறது. அசோகர், சந்திரகுப்த மௌரியரின் பேரன்.
கி.மு.323இல் அலெக்சாண்டர் இறந்த ஓரிரு வருடங்களில், சிந்து நதியின் கிழக்கே கிரேக்க ஆதிக்கம் முடிவுக்கு வரத் தொடங்கியது.
சாணக்கியரின் வழிகாட்டுதலின் கீழ், சந்திரகுப்த மௌரியர், தன நந்தனுக்கு எதிராகப் போரிட்டு முதலில் தோல்வியைத் தழுவினார். ஆனால், பின்னர் அவரைத் தோற்கடித்து, வட இந்தியாவின் ஆட்சியாளரானார்.
சந்திரகுப்த மௌரியரின் 24 ஆண்டுக்கால ஆட்சியில், அவரது படை வெல்ல முடியாததாக இருந்தது. கி.மு.305இல், பாபிலோன் மற்றும் பெர்ஷியாவின் புதிய ஆட்சியாளரான செலூகஸ், அலெக்சாண்டர் இழந்த நிலங்களைக் கைப்பற்ற முயன்றார். அப்போது அவர் சந்திரகுப்த மௌரியரால் தோற்கடிக்கப்பட்டார்.
சந்திரகுப்த மௌரியருக்கு பிறகு பிந்துசாரர் மகதத்தின் அரசரானார். சாணக்கியர், பிந்துசாரருக்கும் வழிகாட்டி ஆனார். சாணக்கியரின் பேரனும் சீடருமான ராதாகுப்தா, அசோகர் மகதத்தின் மன்னராவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
ஏ.எல்.பாஷாம் தனது ‘தி வொண்டர் தட் வாஸ் இந்தியா’ என்ற புத்தகத்தில், “பிந்துசாரரின் மகன் சுசிமா அவரது அரியணைக்கு வாரிசாக இருந்தார். பிந்துசாரருக்குப் பிறகு அவர் மகதத்தின் ராஜாவாக வருவார் என்று நம்பப்பட்டது,” என்று குறிப்பிடுகிறார்.
“பிந்துசாரரின் வாரிசுகளின் பட்டியலில் அசோகரின் பெயர் மிகவும் கீழே இருந்தது. அவர் உயரம் குறைந்தவர். பருமனாகவும் இருந்தார். அவருக்குத் தோல் நோய் இருந்தது. அதனால் அவர் பார்க்க அழகாக இருக்க மாட்டார்,” என்கிறார் பாஷாம்.
“ஒருவேளை அவரது தந்தை அவரிடமிருந்து விலகி இருந்ததற்கும், சாத்தியமான வாரிசுகள் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்,” என்றும் அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
- தொழிலதிபரின் மகளைக் காதலித்த அசோகர்
தலைநகர் பாடலிபுத்திரத்தில் இருந்து தொலைவில் உள்ள தக்ஷசிலாவில் கிளர்ச்சி ஏற்பட்டபோது அதை நசுக்க அவரது தந்தை பிந்துசாரர் அசோகரை அங்கு அனுப்பினார்.
அதன் பிறகு மத்திய இந்தியாவில் உள்ள உஜ்ஜயினிக்கு, பேரரசரின் பிரதிநிதியாக அவர் அனுப்பப்பட்டார். அங்கு விதிஷாவில் உள்ளூர் தொழிலதிபரின் அழகான மகள் மகாதேவி சாக்ய குமாரி மீது அசோகர் காதல் வயப்பட்டார்.
ரொமிலா தாப்பர் தனது ‘அசோகா அண்ட் தி டிக்ளைன் ஆஃப் மௌரியாஸ்’ புத்தகத்தில் “தீபவம்சத்தில் இந்தத் திருமணத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அசோகருக்கு மகிந்தா என்ற மகனும் சங்கமித்தா என்ற மகளும் பிறந்தனர். பின்னர், அவர்கள் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று குறிப்பிடுகிறார்.
“அசோகர் சக்கரவர்த்தி ஆனபோது மகாதேவி பாடலிபுத்திரத்திற்கு செல்ல விரும்பவில்லை. அவர் விதிஷாவிலேயே தங்க விரும்பினார். மகாதேவி ஒரு பௌத்தர் என்றும், விதிஷா அப்போது புத்த மதத்தின் மையமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது,” என்று குறிப்பிடுகிறார் தாப்பர்.
“இரண்டாவதாக, அவர் ஒரு தொழிலதிபரின் மகள். அவரது சமூக அந்தஸ்து அரச குடும்பத்தினருக்கு ஈடானதாக இருக்கவில்லை,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சகோதரர்களைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியவர்
இந்நிலையில், பிந்துசாரர் அசோகரின் மூத்த சகோதரர் சுசிமாவை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் கி.மு.274இல் மற்றொரு கிளர்ச்சி வெடித்தது. இந்த முறை அதைச் சமாளிக்க இளவரசர் சுசிமா அனுப்பப்பட்டார்.
இந்தக் கலகம் முந்தைய கிளர்ச்சியைவிடத் தீவிரமாக இருந்தது. எனவே இளவரசர் சுசிமா தக்ஷசிலாவில் நீண்ட காலம் தங்க வேண்டியிருந்தது.
இதற்கிடையில், மன்னர் பிந்துசாரர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். சுசிமாவை திரும்பி வருமாறும், அசோகரை தக்ஷசிலாவுக்கு செல்லுமாறும் அவர் கட்டளையிட்டார்.
இதற்கிடையில், அசோகரின் ஆதரவாளரான அமைச்சர் ராதா குப்தா தலையிட்டு அரச ஆணையைத் தடுக்க முயன்றார்.
“தனக்கு உடல்நலம் சரியில்லை என்று அசோகர் நாடகமாடினார். தன்னைத் தற்காலிக மன்னராக அறிவிக்குமாறும் மன்னரிடம் வேண்டினார்,” என்று சார்ல்ஸ் எலன் எழுதுகிறார்.
இதைக் கேட்ட உடனேயே பிந்துசாரருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு அவர் காலமானார். சுசிமா பாடலிபுத்திரத்துக்கு திரும்பியபோது தன் இளைய சகோதரர் அசோகர் அந்த நகரத்தைக் கைப்பற்றியிருப்பதையும், அதன் பிரதான வாயில், கிரேக்கத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட கூலிப்படையினரால் காவல் காக்கப்படுவதையும் கண்டார்.
பாடலிபுத்திராவின் கிழக்கு வாசலில் சுசிமா கொல்லப்பட்டது, ஆட்சி அதிகாரத்திற்கான நான்கு ஆண்டுகாலப் போராட்டத்தின் முதல் படி. இந்த நேரத்தில், அசோகர் தனது மற்ற ஒன்றுவிட்ட சகோதரர்கள் 99 பேரையும் கொலை செய்தார். அதன் பிறகுதான் அவர் தன்னை மகதத்தின் மாமன்னராக அறிவித்துக்கொள்ள முடிந்தது.
சுனில் கில்னானி, தனது ‘இன்கார்னேஷன்ஸ்: இந்தியா இன் ஃபிஃப்டி லைவ்ஸ்’ என்ற நூலில், “கொல்லப்பட்ட சகோதரர்களின் எண்ணிக்கை உண்மையில் ஆறு,” என்று குறிப்பிடுகிறார்.
“ஆனால் அரியணைக்கான ரத்தக்களரிப் போராட்டம் பல ஆண்டுகள் தொடர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அப்போது அசோகருக்கு 34 வயது,” என்றும் அவர் எழுதியுள்ளார்.
- அந்தப்புரப் பெண்களை உயிருடன் எரித்தவர்
அசோகர் தனது முடிசூட்டு விழாவை மற்றொரு இளவரசியை திருமணம் செய்துகொண்டு கொண்டாடினார்.
அசோகரின் அந்தப்புரத்தில் பல பெண்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் பலர் அசோகரை அழகற்றவர் என்று கருதினர். அசோகர் அவர்களை உயிருடன் எரித்ததாகக் கூறப்படுகிறது.
பாடலிபுத்திரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த பிறகு அசோகர் விதிஷாவில் விட்டுச் சென்ற தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் அழைத்துக்கொண்டார்.
அசோகருக்கு குறைந்தது ஆறு மனைவிகள் இருந்தனர். அலகாபாத்தில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு, ‘அசோகரின் இரண்டாவது மனைவி காருவகி’ என்று குறிப்பிடுகிறது. அசோகரின் முக்கிய மனைவி அசந்திமித்ரா, அசோகருடைய ஆட்சியின் 13வது ஆண்டில் அவர் காலமானார்.
அசோகர் கி.மு.265இல் பௌத்த மதத்தைத் தழுவினார். இருப்பினும் முதல் ஒன்றரை ஆண்டுகளில் இந்த மதத்தைத் தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.
அவர் பௌத்தராக மாறிய இரண்டு ஆண்டுகளில் அவரது மகன் மகிந்தா ‘பௌத்த பிக்குவாகவும்’ மகள் சங்கமித்தா, ‘துறவியாகவும்’ ஆனார்கள்.
கலிங்கப் போரின் ரத்தக்களரி
அசோகர் ஆங்கிலேயர்களுக்கு முன்பே இந்தியாவின் மிகப்பெரிய பகுதியை ஆண்டவர் என்று கூறப்படுகிறது. அசோகர் அரியணை ஏறிய நேரத்தில், ரோம் மற்றும் கார்தேஜ் இடையே முதல் பியூனிக் போர் நடந்து கொண்டிருந்தது. பெர்ஷியாவில் ஒரு ரத்தக்களரி மோதல் நடந்து கொண்டிருந்தது. சீனப் பேரரசர், ’சீனப் பெருஞ்சுவரை’ கட்டிக் கொண்டிருந்தார்.
கி.மு.362இல் அசோகர் கலிங்கத்தை எதிர்த்துப் போரிட்டார். இந்தப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதுடன், போருக்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக மேலும் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.
ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அல்லது நாடு கடத்தப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.
பாட்ரிக் ஒலிவெல் எழுதிய ‘Ashoka: Portrait of a Philosopher King’ என்ற நூல் சமீபத்தில் பிரசுரமானது.
“கலிங்கத்தின் அப்போதைய மக்கள் தொகை 9.75 லட்சம் என்று வரலாற்று ஆசிரியர் சுமித் குஹா குறிப்பிடுகிறார். மக்கள் தொகையை 10 லட்சம் என்று வைத்துக்கொண்டாலும், இறந்தவர்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 20%. மேலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால், மொத்த மக்கள் தொகையில் 35% பேர் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டனர். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இதை ‘மாபெரும் அழித்தொழிப்பு’ என்று சொல்வது தவறாக இருக்காது,” என்று இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்.
- புத்தரின் சீடர்
இந்த வெற்றி அசோகரின் சாம்ராஜ்யத்தை வங்காள விரிகுடா வரை விரிவுபடுத்தியது. மேலும் அவர் தொடர்ந்து 37 ஆண்டுகள் அப்பகுதி மீது ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் மாபெரும் ரத்தக்களரிக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி அசோகரின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. அவர் அதற்காகப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவில் அந்த நேரத்தில் புதிதாக இருந்த கௌதம புத்தரின் போதனைகளை அசோகர் ஏற்றுக்கொண்டார்.
அசோகர் காலத்தில் இந்திய சமூகத்தில் இருந்த பன்முகத்தன்மை, அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை ஒன்றாக வைத்திருக்க, போதுமான நெகிழ்வுடன் கூடிய உலகளாவிய கண்ணோட்டம் தேவைப்பட்டது.
“கலிங்கப் போர், பெயரளவிற்கு பௌத்தராக இருந்த அசோகரை ஒரு உண்மையான பௌத்தராக மாற்றியது. அன்றிலிருந்து அசோகச் சக்ரவர்த்தி புத்தரின் போதனைகளின்படி ஒழுக்க விழுமியங்களைச் சுற்றித் தனது ஆட்சியை வடிவமைத்தார்,” என்று சார்லஸ் எலன் எழுதுகிறார்.
“ஒரு நல்ல ஆட்சியாளராக அசோகர் மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்க்கொண்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே அவர் பேசும் வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. தான் சொல்வதை உலகமே கேட்கவேண்டும் என்று அசோகர் விரும்பினார். என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய எழுத்து மொழியில் தன்னை வெளிப்படுத்த அவர் முன்முயற்சி எடுத்தார்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
மக்கள் பேசும் மொழியில் செய்தி
அவர் தனது செய்திகளைத் தன்னுடைய பேரரசு முழுவதும் பேசப்பட்ட பிராகிருத மொழியில் எழுதினார். “அசோகரின் தகவல் தொடர்பு பாணி மௌரிய பேரரசர்களிடையே தனித்துவமானது,” என்று சுனில் கில்னானி எழுதுகிறார்.
“கல் தூண்கள் அல்லது கல் தொகுதிகள் இருக்கும் இடங்களில் தன்னுடைய வார்த்தைகள் நீண்ட காலம் இருக்கும்படியாகப் பொறிக்கப்பட வேண்டும் என்று தனது ஏழாவது அரசாணையில் அசோகர் எழுதியுள்ளார்.
”என் மகன் அல்லது பேரன் ஆட்சி செய்யும் வரை, அல்லது சூரியனும் சந்திரனும் பிரகாசிக்கும் வரை, மக்கள் இந்த வார்த்தைகளைப் படிக்க முடியும். பெரும்பாலான கல்வெட்டுகளில் அசோகர் மூன்றாம் நபராக அல்லது ‘அவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.”
“ஆனால், சில பாறைக் கல்வெட்டுகளில், ‘நான்’ என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாறைக் கல்வெட்டுகளில் உள்ள நபரின் உணர்திறன் பற்றிய பார்வை நமக்கு கிடைக்கிறது,” என்கிறார் கில்னானி.
அசோகரின் பெரும்பாலான கல்வெட்டுகள் பிராகிருத மொழியின் பிராமி எழுத்துகளில் உள்ளன. சில கல்வெட்டுகள் கிரேக்க மற்றும் அராமிக் எழுத்துகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
- சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சைக்கு முக்கியத்துவம்
அசோகர் ‘தம்மம்’ என்ற கருத்தை உள்வாங்கிப் பின்பற்றத் தொடங்கினார்.
‘தம்மம்’ என்பது ஆன்மீகத் தூய்மை, அல்லது புனிதச் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக உலக நடத்தையை அடிப்படையாகக் கொண்டது.
இந்த சித்தாந்தம் சகிப்புத்தன்மைக்கு ஆதரவாகவும் வன்முறைக்கு எதிராகவும் இருந்தது. “அசோகர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்த முதல் கொள்கை, பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களின் சகவாழ்வு ஆகும். அனைவரும் சகவாழ்வு உணர்வுடன் ஒன்றாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்,” என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார்.
“நீங்கள் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். ஏனென்றால் அப்படி மதிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் சொந்த மதத்தை நீங்கள் மதிக்க முடியும். இதுதான் தம்மத்தின் அடிப்படைக் கொள்கை. இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனக்கு சுவாரஸ்யமாகத் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மதப்பிரிவுகளுக்கு இடையே பகைமை அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுவதாக,” கூறுகிறார் தாப்பர்.
தம்மத்தின்படி, குடிமக்களின் நலன், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றிச் சிந்தித்து அந்தத் திசையில் செயல்படுவது ஆட்சியாளரின் கடமை.
சாலையோரங்களில் ஆலமரம் அல்லது மாமரங்களை நடுவதும், பயணிகளுக்கு உணவு மற்றும் ஓய்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அரசனின் கடமை.
அசோகரின் மிகவும் உயரிய எண்ணப்போக்கு 12வது பாறைக் கல்வெட்டு அரசாணையில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் மதச் சகிப்புத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அசோகர் இதை ’பேச்சில் கட்டுப்பாடு’ என்று குறிப்பிடுகிறார்.
“அதீத பக்தியால் தன் மதத்தைப் போற்றி, பிற மதத்தை விமர்சிப்பவன், தன் மதத்திற்கே கேடு விளைவிப்பவன் ஆவான். ஆகவே பல்வேறு மதத்தினரிடையே நல்லிணக்கம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பிறருடைய கருத்துகளுக்குச் செவிமடுக்க வேண்டும். அதை மதிக்க வேண்டும்,” என்று அந்தப் பாறைக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
அசோகரின் மரணத்திற்குப் பிறகு மௌரியப் பேரரசு வீழ்ச்சியடையத் துவங்கியது. அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் அவரது மத நம்பிக்கை உச்சத்தில் இருந்தது.
தனது முழு கருவூலத்தையும் காலி செய்யும் அளவிற்கு அவருடைய மதப் பற்று அதிகமானது. அவர் தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்தார் என்று புத்த மதக் கதைகள் தெரிவிக்கின்றன.
“அசோகர் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருந்தபோது தாம் உயிர் பிழைக்க மாட்டோம் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. தன்னிடம் இருந்த ரத்தினங்களையும், நகைகளையும் நல்ல காரியங்களுக்காகத் தானம் செய்ய அவர் விரும்பினார். ஆனால் அதற்குள் அவரது அமைச்சர்கள் ஆட்சியில் அமர்ந்துவிட்டனர். அவர் விரும்பிய எதையும் செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை,” என்று லி ரோங்ஸி தனது ‘தி கிரேட் டாங் டைனஸ்டி ரெக்கார்ட் ஆஃப் தி வெஸ்டர்ன் ரீஜன்ஸ்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அசோகர் கி.மு.232இல் இயற்கை எய்தினார்.
மௌரிய வம்சத்தின் முடிவு
பிருஹத்ரதர், மௌரிய வம்சத்தின் கடைசி அரசர். கி.மு.181-180இல் அவர் தளபதி புஷ்யமித்ரரால் கொல்லப்பட்டார்.
பின்னர் புஷ்யமித்ரர் சுங்க வம்சத்தை நிறுவினார். மௌரிய வம்சம் மொத்தம் 137 ஆண்டுகள் நீடித்தது.
“ஹான் மற்றும் ரோமன் போன்ற பிற ராஜ வம்சங்களுடன் ஒப்பிடும்போது, மௌரிய வம்சம் மிகவும் குறுகிய காலமே இருந்தது. அதன் எழுச்சி சந்திரகுப்த மௌரியரின் வெற்றிகளுடன் தொடங்கியது. அவரது பேரன் அசோகரின் ஆட்சியின்போது அது உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பிறகு அது வேகமாக வீழ்ச்சி கண்டது.
அசோகரின் மகன்கள் மற்றும் பேரன்கள், தங்கள் தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தா போல திறமை கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்களுடைய ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அசோகரின் முழு சாம்ராஜ்யமும் அதன் பல உரிமைதாரர்களிடையே பிரிக்கப்பட்டது,” என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார்.
தங்கள் அப்பா, தாத்தாவை போல தொலைதூரப் பார்வையும் அவர்களுக்கு இருக்கவில்லை. அசோகரை போல் அவர்கள் கல்வெட்டு எதையும் எழுதவில்லை.
- சுதந்திர இந்தியாவில் அசோகரின் பாரம்பரியம்
அசோகரின் மரணத்திற்குப் பிறகு மௌரியப் பேரரசு வீழ்ச்சியடையத் துவங்கியது.
இறுதியில், இந்திய மக்கள் அசோகரை மறந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். படிப்படியாக பிராகிருத மொழி மற்றும் பிராமி எழுத்துகளின் பயன்பாடு முடிவுக்கு வந்தது. எனவே, மக்களால் அசோகரின் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட செய்திகளைப் படிக்க முடியவில்லை.
விதியின் விளையாட்டைப் பாருங்கள்…
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களான வில்லியம் ஜோன்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிரின்செப், 19ஆம் நூற்றாண்டில் அசோகரை மீண்டும் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் பிராமி எழுத்துகளின் அர்த்தத்தை மக்களுக்கு விளக்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசியல் நிர்ணய சபையில் பேசிய ஜவஹர்லால் நேரு, தேசியக் கொடியின் வடிவமைப்பை இறுதி செய்வதற்கான யோசனையை முன்வைத்தார். இந்திய மூவர்ணக் கொடியின் நடுவில் அசோகரின் தூண்களில் இருந்த சக்கரத்திற்கு இடம் அளிக்கப்பட்டது.
”இந்தக் கொடியில் அசோக சின்னத்தை மட்டும் அல்ல, இந்தியா மட்டுமின்றி உலக வரலாற்றின் முக்கியப் பிரமுகராக இருந்தவரையும் இணைத்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று நேரு அப்போது குறிப்பிட்டார்.
அசோகர் இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகமான ஆளுமையாக இருந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அசோகருக்கு கிட்டத்தட்ட புதிய நாட்டின் ‘புரவலர் துறவி’ என்ற அந்தஸ்தை வழங்கினார்.
அசோகரின் நான்கு சிங்கங்கள் இந்திய தபால் தலைகளில் மட்டும் இடம்பெறவில்லை. இந்தியாவின் இந்தத் தேசிய சின்னம் இந்தியர்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த அடையாளமாகவே மாறிவிட்டது.
இது அமைதியான சக வாழ்வின் சின்னமாகவும் உள்ளது. பொது வாழ்வில்கூட கட்டுப்பாடு மற்றும் சுயக்கட்டுப்பாடு என்ற அசோக சக்ரவர்த்தியின் செய்தி இன்று இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது.
பிபிசி தமிழ்