Features

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர்.

ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை 2025-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது.

தற்போது, 6 படுக்கையறை அளவைக் கொண்டுள்ள சிறிய பகுதியில் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஒன்பது பேருடன் இவர்களும் தங்கியுள்ளனர்.

மகிழ்ச்சியான இடம் இது என்று சுனிதா கூறுகிறார். வில்மோரோ அங்கே தங்கியிருப்பது சிறப்பானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் பூமியில் இருந்து 400 கி.மீக்கு அப்பால் விண்வெளியில் இருப்பது எத்தகைய உணர்வை வழங்கும்? உடன் தங்கியிருப்பவர்களுடன் எப்படி இதனை சமாளிப்பீர்கள்? உங்களின் உடைகளை எப்படி துவைப்பீர்கள்? எப்படி உடற்பயிற்சி மேற்கொள்வீர்கள்? என்ன உணவு உட்கொள்வீர்கள்? முக்கியமாக விண்வெளியின் வாசம் எப்படி இருக்கும்? சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற கேள்விகளை விண்வெளிக்கு சென்று திரும்பிய மூன்று முன்னாள் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டது பிபிசி நியூஸ்.

விண்வெளியில் ஒரு நாள்

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்தையும் பூமியில் உள்ள ஆராய்ச்சிக் குழு நிர்வகிக்கிறது. அதிகாலையில் எழுவார்கள். ஜி.எம்.டி. நேரப்படி காலை 6.30 மணிக்கு, ஒரு போன் பூத் அளவே இருக்கும் படுக்கை அறையில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள். இதனை ஹார்மோனி என்று அழைக்கின்றனர் அவர்கள்.

மிகச்சிறந்த படுக்கைப் பை அது என்று கூறுகிறார் நிகோல் ஸ்டோட். நாசாவில் பணியாற்றிய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான அவர், 2009 முதல் 2011ம் ஆண்டுக்கு இடையே 104 நாட்கள் விண்வெளியில் அவர் தங்கியிருந்தார்.

அந்த படுக்கையறையில் மடிக்கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் குடும்ப உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ள இயலும். தங்களின் தனிப்பட்ட பொருட்களான புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை வைத்துக் கொள்ளவும் இடம் உள்ளது.

  • சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்
படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள் தூங்குவது எப்படி?
சிறுநீரை சேமித்து வைக்கும் ஐ.எஸ்.எஸ்.

அதன் பின்னர், உறிஞ்சும் அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் கழிப்பறையை அவர்கள் பயன்படுத்துவார்கள். பொதுவாக வியர்வை மற்றும் சிறுநீர் மறுசுழற்ச்சி செய்யப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தற்போது ஆராய்ச்சிக் குழுவினர் சிறுநீரை சேமித்து வைக்கின்றனர்.

பிறகு அவர்கள் வேலை செய்ய வேண்டும். பக்கிங்காம் அரண்மனை அல்லது அமெரிக்காவின் கால்பந்து மைதானம் அளவே இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பராமரிப்பது அல்லது அறிவியல் சோதனைகளில் ஈடுபடுவது என்று தங்களின் பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுவார்கள்.

“பல பேருந்துகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பது போல் அதன் உட்பகுதி இருக்கும். பாதி நாள் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காது” என்று கூறுகிறார் கனடாவைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரான க்ரிஸ் ஹட்பீல்ட். அவர் எக்ஸ்பெடிஷன் 35 திட்டத்தின் தளபதியாக 2012 முதல் 2014 வரை பணியாற்றியவர்.

“அந்த நிலையத்தில் மனிதர்கள் நடந்து கொண்டே இருக்கமாட்டார்கள். அது மிகவும் பெரியது. அமைதியானது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்
படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி நிலையத்தின் அளவு என்ன?
நேரம் கிடைக்கும் போது கடிதம் எழுதுவேன்

ஆராய்ச்சி பணிகளுக்கென ஆறு ஆய்வகங்கள் அங்கே உள்ளன. சவாலான சூழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ச்சியாளர்கள் இதயம், மூளை அல்லது இரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க கருவிகளை அணிவார்கள்.

“நாங்கள் கினி பன்றிகள்,” என்று கூறுகிறார் ஸ்டோட். “விண்வெளியில் எங்களின் எலும்புகளும் தசைகளும் துரிதமாக வயதாகிறது. அதன் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ளவும் இயலும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அவர்களால் முடிந்தால், பூமியில் இருக்கும் குழு கணித்ததைக் காட்டிலும் வேகமாக இயங்க முடியும் என்று ஹட்பீல்ட் கூறுகிறார். “எந்த வேலையும் இன்றி ஐந்து நிமிடம் கிடைக்குமா என்று பார்ப்பது தான் உங்களுக்கு அங்கே பெரிய வேலை. அப்படி கிடைத்தால் நான் ஜன்னல் அருகே சென்று வேடிக்கை பார்ப்பேன். இசைக் குறிப்பை எழுதுவேன், புகைப்படம் எடுப்பேன் அல்லது என் குழந்தைகளுக்கு ஏதாவது எழுதுவேன்,” என்று அவர் கூறினார்.

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,கனடாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் க்ரிஸ் ஹட்பீல்ட்
விண்வெளிக்கு வாசனை இருக்கிறதா?

அதிர்ஷ்டம் இருந்தால் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே சென்று விண்வெளியில் நடக்க சொல்வார்கள். ஹட்பீல்ட் இரண்டு முறை விண்வெளியில் இப்படி நடந்துள்ளார். “எனக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே என்னுடைய ப்ளாஸ்டிக் முகக்கவசம் தவிர வேறேதும் இல்லாத 15 மணி நேரம். மிகவும் உற்சாகமான 15 மணி நேரம். வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் என்னுடைய வாழ்வில் இருக்கும் மற்ற 15 மணி நேரங்களைப் போன்ற நேரம் அது,” என்று கூறினார்.

ஆனால் அப்படி நடக்கும் போது விண்வெளியின் உலோக வாசனை என்ற புதுமையான ஒன்றின் அறிமுகம் கிடைக்கலாம்.

“பூமியில் நமக்கு பலவிதமான வாசனைகள் இருக்கின்றன. புதிதாக சலவை செய்த உடை அல்லது சுத்தமான காற்று போன்ற பல்வேறு வாசனைகள். ஆனால் விண்வெளியில் ஒரே ஒரு வாசனை தான். அதை விரைவாகப் பழகிக் கொள்கிறோம், ”என்று கூறுகிறார் ஹெலன் ஷர்மன். அவர் 1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மிர் விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்களைக் கழித்த முதல் பிரிட்டிஷ் விண்வெளி ஆராய்ச்சியாளராவார்

“ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியேறும் உடை அல்லது ஆராய்ச்சிக் கருவிகள் போன்ற பொருட்கள் வலுவான கதிர்வீச்சால் பாதிக்கப்படுகின்றன. அவை விண்வெளி மையத்திற்குள் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து ஒரு உலோக வாசனையை உருவாக்குகின்றன,” என்று அவர் கூறுகிறார்.

அவர் பூமிக்கு திரும்பி வந்த போது, உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க துவங்கினார். “விண்வெளியில் கால நிலை இல்லை. உங்கள் முகத்தில் மழையை உணரமாட்டீர்கள். உங்கள் முடியில் காற்றின் வேகத்தை உணரமாட்டீர்கள். இன்று வரை இது போன்ற சின்னசின்ன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்,” என்று 33 ஆண்டுகள் கழித்து தன்னுடைய அனுபவத்தை நினைவு கூறுகிறார் அவர்.

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்
படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி நிலையம் எப்படி இருக்கும்?

நீண்ட நாட்கள் அங்கே தங்கியிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் வேலைக்கு மத்தியில் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மூன்று வெவ்வேறு இயந்திரங்கள் ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் வாழ்வதன் விளைவை எதிர்கொள்ள உதவுகின்றன. ஈர்ப்பு விசை அற்ற பகுதி எலும்பு அடர்த்தியைக் குறைக்கிறது

அட்வான்ஸ்டு ரெசிஸ்டிவ் எக்ஸர்சைஸ் டிவைஸ் (ARED) என்ற கருவி அமர்ந்து – எழுந்து செய்யும் உடற்பயிற்சி, எடை தூக்குவது போன்ற அனைத்து தசைகளுக்கும் வேலை அளிக்கும் உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது என்று கூறுகிறார் ஸ்டோட்.

அங்கே அவர்கள் மிதப்பதைத் தடுக்க இரண்டு டிரெட்மில்களையும், தாக்குப்பிடிக்கும் பயிற்சிக்காக எர்கோமீட்டரையும் பயன்படுத்துகின்றனர்.

  • சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி மையத்தில் 104 நாட்கள் தங்கியிருந்தார் ஸ்டோட்
மூன்று மாதங்களுக்கு ஒரே ஒரு கால் சட்டை

நாங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் நிறைய வியர்வையை உருவாக்குவதால் துவைக்கும் வேலையை அதிகரிக்கிறது என்று கூறுகிறார் ஸ்டோட்.

சலவை செய்ய இயந்திரங்கள் கிடையாது. குமிழ் வடிவில் இருக்கும் நீரும் சில சோப்புகளையும் தான் பயன்படுத்துவோம் என்று கூறும் அவர், “ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வியர்வை உடலில் ஒரு படலம் போல மூடிக் கொள்ளும்,” என்று விளக்குகிறார்.

“தலையில் வியர்வை வளர்வதைப் போல் உணர்வேன். நான் என்னுடைய தலையை கீழே தேய்க்க வேண்டும். தலையை அசைத்தால் அந்த வியர்வை அனைத்து இடங்களுக்கும் பரவும்,” என்று விவரிக்கிறார் ஸ்டோட்.

“ஆடைகள் மிகவும் அழுக்கான பிறகு அதனை விண்வெளியில் எரிந்து கொண்டிருக்கும் சரக்கு வாகனத்தில் எறிந்துவிடுவோம். ஆனால் எங்களின் அன்றாட பயன்பாட்டிற்கான ஆடைகள் சுத்தமாக இருக்கும்” என்கிறார் ஸ்டோட்.

“ஈர்ப்பு விசை இல்லாத போது, ஆடைகள் உடலில் மிதக்கும். எண்ணெய் போன்ற எதுவும் அவற்றைப் பாதிக்காது. நான் மூன்று மாதங்களுக்கு ஒரே ஒரு கால்சட்டையை தான் அணிந்திருந்தேன், ”என்று அவர் விளக்குகிறார்.

உண்மையில் உணவுதான் மிகப்பெரிய ஆபத்து. “யாராவது இறைச்சிகள் அல்லது குழம்பை அடைத்து வைத்திருக்கும் ஒரு கேனைத் திறப்பார்கள். சின்னஞ்சிறிய பந்துகள் போல் அவை வெளியேறினால், அனைவரும் விழிப்புடன் இருந்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் வருவதைப் போல் பின்னோக்கி மிதந்து கொண்டிருப்போம்,” என்றும் கூறுகிறார் அவர்.

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்
படக்குறிப்பு,பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது சர்வதேச விண்வெளி நிலையம்?
குணநலன்களுக்கு முக்கியத்துவம்

நீண்ட உழைப்புக்கு பிறகு இரவு உணவுக்கான நேரம். பொதுவாக அனைத்தும் தனித்தனியாக வைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் வழங்கப்படும் உணவாக தான் இருக்கும். பல நாட்டு உணவுகள் அதில் இருக்கும். “முகாம்களில் அல்லது ராணுவத்தில் வழங்கப்படும் உணவு போன்று தான் இருக்கும். ஆனால் ஆரோக்கியமானது,” என்று கூறுகிறார் ஸ்டோட்.

“எனக்கு பிடித்தது ஜப்பான் நாட்டு குழம்பு வகைகள் அல்லது ரஷ்யாவின் செரல் அல்லது சூப் வகைகள் தான். வீட்டில் இருந்து குடும்பத்தினர் அவர்களுக்கு பிடித்த உணவுகளை அனுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். என்னுடைய கணவரும் மகனும் எனக்கு சாக்லேட் கலந்த இஞ்சியை அனுப்பி இருந்தனர். குழுவினர் அனைவரும் பகிர்ந்துதான் உணவை உட்கொள்வோம்,” என்று கூறுகிறார் ஸ்டோட்.

பொறுமை, அமைதி, குழுவாக பணியாற்றும் திறன் போன்ற தனிப்பட்ட குணநலன்கள் அடிப்படையில் தான் விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது சண்டை சச்சரவு போன்றவை ஏற்படுவதை குறைக்கிறது என்கிறார் ஷர்மன்.

“இது ஒருவரின் மோசமான நடத்தையை பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல, அதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதும் தான். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க தோள்களில் தட்டிக் கொடுப்போம்,” என்று அவர் கூறுகிறார்.

  • சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,Ria Novosti/Science Photo Library

படக்குறிப்பு,விண்வெளியில் இருந்து திரும்பிய ஹெலன் ஷர்மனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு
எட்டு மணி நேர தூக்கம்

இறுதியாக தூக்கம். கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி ஆராய்ச்சியாளர்கள் சுவாசிக்க ஏதுவாக நாள் முழுவதும் மின்விசிறிகள் ஓடிக் கொண்டே இருப்பது சத்தமான சூழலை உருவாக்கும். நீண்ட நேரம் அந்த சூழலில் பணியாற்றிவிட்டு வந்த பிறகு படுக்கை தான்.

எட்டு மணி நேரம் தூங்க வழங்கப்படும். ஆனால் பெரும்பாலானோர் ஜன்னல் அருகே அமர்ந்து பூமியை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்கிறார் ஸ்டோட்.

மூன்று பேரும் பூமியை அதன் சுற்றுப்பாதையில் 400 கிமீ உயரத்தில் இருந்து பார்ப்பதன் உளவியல் தாக்கம் பற்றி பேசினர்.

விண்வெளியின் பரப்பில் நான் முக்கியமில்லை என்பதைப் போல் உணர்ந்தேன் என்கிறார் ஷர்மன்.

அங்கிருந்து பூமி மேகங்கள், சுழல்களைப் பார்ப்பது, நாம் கட்டமைத்திருக்கும் புவிசார் அரசியல் எல்லைகளைப் பற்றியும் உண்மையில் நாம் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வைத்தது.

பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் சார்பாகவும் இந்த வேலையை ஒன்றாக செய்வது, பிரச்னைகளை சேர்ந்தே கையாள்வது என 6 வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நபர்களுடன் தங்கியிருந்தது மகிழ்ச்சி அளித்தது என்று கூறுகிறார் ஸ்டோட். இங்கு முடியும் இந்த நிகழ்வு ஏன் பூமியில் சாத்தியமில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார் அவர்.

சுனிதாவும் வில்மோரும் அங்கே மாட்டிக் கொண்டதாக மக்கள் ஏன் நினைக்கிறார்கள் என்று தங்களுக்கு புரியவில்லை என்று 3 பேரும் கூறுகின்றனர்.

“விண்வெளியில் நீண்ட காலம் தங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் கனவு கண்டோம், உழைத்தோம், அதற்காக பயிற்சி செய்தோம்” என்று ஹட்பீல்ட் கூறுகிறார். “ஒரு விண்வெளி வீரருக்கு நீங்கள் அளிக்கும் மிகப்பெரும் பரிசு, அவர்களை நீண்ட காலம் அங்கே தங்க வைப்பது தான்” என்றும் அவர் கூறினார்.

“நீ என் கையைப் பிடித்து இழுக்க வேண்டும். நான் மீண்டும் இங்கே வருவேனா என்று எனக்கு தெரியாது,” என்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கிளம்பும் போது ஸ்டோட் நினைத்ததாக கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading