Cinema

ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்த ஃபகத் பாசில்!

 

‘லால் சலாம்’ படத்தை அடுத்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள படம் ‘வேட்டையன்’. ‘ஜெய்பீம்’ புகழ் தா.செ. ஞானவேல் இயக்கி உள்ளார்.

அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘வேட்டையன்’, படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் வழக்கம்போல் கலகலப்பாக பேசினார்.

ரஜினியின் உரை:

இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில், கதை, திரைக்கதை ஒரு ஆள் எழுதுவார். இயக்கம் வேறு ஒரு ஆள் செய்வார்.

இப்போது எல்லாவற்றையும் ஒரே ஆள்தான் செய்ய வேண்டும் – அது மிகவும் கடினமாக இருக்கிறது.

‘ஜெய்பீம்’ பார்த்தப் பிறகு நான் ஞானவேலுக்கு போன் செய்தேன் – அவர் ஒரு பத்திரிகையாளர் என்றும், முன்பே ஒரு படம் செய்திருக்கிறார் என்றும் தெரிந்தது.

நான் மீண்டும் ஜெய்பீம் படத்தைப் பார்த்து வியந்தேன். அதன் பிறகுதான் எனக்காக ஒரு கதை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினேன்.

ஒரு படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தூக்கம் போய்விடும்.

ஒரு படம் வெற்றி பெற்றால் அது வேறு ஒரு டென்ஷன் – பழையை வசூலை கொடுக்கவில்லை என்றால், நான் பழைய ஃபார்மில் இல்லை என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.

‘ஜெயிலர்’ மிகப்பெரிய வெற்றிபெற்ற பிறகு எனக்கு இதே தலைவலிதான். இந்தக் காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது.

இயக்குநர்கள் உடனான காம்பினேஷனும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறது.

இந்தப் படத்தில் 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார்.

அதற்கு உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு 1000 சதவீதம் அவர்தான் வேண்டும் என்று சொன்னேன் – அனிருத் என் மகன் மாதிரி.

ஃபஹத் பாசில் ஞானவேலிடம் இந்தப் படத்தில் நான் சம்பளமே வாங்காமல் கூட நடிக்கிறேன் – ஆனால் ஒரு மாதம் மட்டும் டைம் வேண்டும்.

காரணம் தனக்கு நிறைய ஷூட்டிங் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

இதை என்னிடம் ஞானவேல் சொன்னபோது நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன்.

ஏனென்றால் தயாரிப்பாளர் இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் – இன்னொரு பக்கம் லோகேஷ், ‘கூலி’ படத்துக்காக காத்திருக்கிறார் .

நான் லோகேஷிடம் போய் ஒரு மாதம் டைம் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, அவர், ‘எடுத்துக் கொள்ளுங்கள் – இன்னும் ‘கூலி’ படத்தின் கதை ரெடியாகவில்லை என்று சொன்னார்.

இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை பணம் கொடுத்து கெடுக்கிறார்கள் – குழந்தைகளுக்கு பணம் கொடுக்காதீர்கள், நல்ல குணம் கொடுங்கள் என ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் பேசிய டைரக்டர் ஞானவேல், ‘ரஜினி சார் எனக்கு கிடைச்ச கோல்டன் விசா – எல்லாருக்கும் ரஜினி சார் படத்துல ஒரு ஸ்டைல் மற்றும் காட்சி பிடிக்கும்.

எனக்கு ‘படையப்பா’ படத்தில் ரஜினி சார் ஊஞ்சல் ஆடும் காட்சி பிடித்திருந்தது – அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதினேன்.

தலைவருக்கு தெரிந்த ரசிகர்களைவிட தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் – அவர்களில் நானும் ஒருவன்’ என, தனது நாயகனுக்கு, ஞானவேல் புகழாரம் சூட்டினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading