World

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம்!

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதற்குத் தான் தனிப்பட்ட முறையில் அனுமதி கொடுத்ததாகத் தெரிவித்தார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் ஆதரவு உள்ள நிலையில், அவர் ஈரானிற்கும் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் போர் ஒரு பக்கம் காசாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.. மற்றொருபுறம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயும் தாக்குதல் பெரிதாக வெடித்துள்ளது.

ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக இரண்டு நாட்கள் கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தின. அப்படி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 64 வயதான நஸ்ரல்லா கொல்லப்பட்டார். நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேல் ராணுவத்தின் முக்கியமான சாதனை என்று தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான படி என்றும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறுகையில்,

“.. நஸ்ரல்லா சாதாரண ஹிஸ்புல்லா பயங்கரவாதி இல்லை. அவன் இஸ்ரேல் மீது பல தாக்குதல்களை நடத்த மூளையாகச் செயல்பட்டுள்ளான். 1980கள் முதலே குண்டுவெடிப்புகள் உட்பட ஏராளமான தாக்குதல்களை நடத்த நஸ்ரல்லா மூளையாகச் செயல்பட்டுள்ளான்.

1983ல் பெய்ரூட்டில் அமெரிக்கத் தூதரகத்தில் 63 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தாக்குதல்களைச் சொல்லலாம். நஸ்ரல்லாவின் மரணம் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் திறனைக் குறைக்கும். நஸ்ரல்லா உயிருடன் இருந்த வரை, ஹிஸ்புல்லா நடத்திய பல தாக்குதலுக்கு அவரே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருந்தார். பல நூறு பேரைக் கொன்று குவித்த நபரை இப்போது நாம் கொலை செய்துள்ளோம்.

வடக்கு இஸ்ரேலில் வாழ்ந்த பல மக்கள் ஹிஸ்புல்லா தாக்குதலைப் பார்த்து அஞ்சியே அங்கிருந்து வெளியேறினர். இப்போது நஸ்ரல்லாவை கொலை செய்தது அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகத் திரும்ப மிக முக்கியமான படியாக இருக்கும். ஹிஸ்புல்லா அமைப்பால் தன்னை பாதுகாக்க முடியாது என்று ஹமாஸ் தலைவர் யஹ்யா உணர்ந்தால் மட்டுமே நமது பணைய கைதிகளை மீட்க முடியும். எனவே, அதற்கும் இந்தத் தாக்குதல் மிக முக்கியம்.

இந்தத் தாக்குதலுக்கு நான் நமது அனைத்து உளவு மற்றும் பாதுகாப்புப் படைக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும். நாம் இன்று இந்த போரில் வெல்கிறோம். அதற்கு நமது உளவு மற்றும் பாதுகாப்புப் படை தான் மிக முக்கிய காரணம்..” என்று அவர் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் தான் ஆதரவு அளித்து வருகிறது. ஈரானையும் நேரடியாக எச்சரித்த நெதன்யாகு தெரிவிக்கையில்;

“.. இஸ்ரேல் நினைத்தால் எதிரிகள் எங்கு இருந்தாலும் கொலை செய்ய முடியும். ஈரான் உட்பட இந்த பிராந்தியத்தில் எங்குச் சென்று ஒளிந்தாலும் தப்ப முடியாது. நஸ்ரல்லா கொல்லப்பட்டது ஈரானுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை. இஸ்ரேலின் கைக்கு எட்டாத அளவுக்கு ஈரானில் வெகு தொலைவில் எல்லாம் இல்லை. ஈரானுக்கு நான் சொல்கிறேன்: யார் எங்களை அடித்தாலும், நாங்கள் அவர்களைத் திருப்பி அடிப்போம்..” என்று எச்சரிக்கை விடுத்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading