Local

நாடாளுமன்ற முடக்கம் பெரிய விடயமல்ல – அரச பேச்சாளர் விளக்கம்!

நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று  அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம் எதிர்வரும் நொவம்பர் 5ஆம் நாளே கூடவிருந்தது. அது 16ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

எனவே, உண்மையில் 10 நாட்களே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒன்றும் பிரச்சினையில்லை. எது எவ்வாறாயினும், நொவம்பர் 16ஆம் நாளுக்கு முன்னதாக நாடாளுமன்றம் ஒருபோதும் கூட்டப்படாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பின் சிங்கள மொழிப் பிரதியில், பிரதமரை நீக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு உள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்தார் என்றும், அமைச்சரும், அரசாங்க பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நீதி மன்றத்தின் தீர்ப்புக்கள்  அனைத்தும் சிங்கள மொழியில் உள்ள அரசியலமைப்புக்கு அமையவே அமைகின்றன.

ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலத்தில் உள்ள அரசியலமைப்பைப் படித்து விட்டு அதற்கமையவே செயற்படுகிறார்.

அதன்படியே, பிரதமரின் பதவி நீக்கம் மற்றும் புதிய பிரதமர்  நியமனம் என்பன அரசியலமைப்புக்கு முரணானது என்று  வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஆங்கில அரசியலமைப்பை விடுத்து, சிங்கள அரசியலமைப்பை படித்து தெளிவு பெற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading