இலங்கையிலுள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையளிக்கும் பரிஸ்டாவின் “Share a Meal” பிரச்சாரம் ரூ. 6.78 மில்லியன் நிதி திரட்டி சாதனை
கொழும்பு, ஜனவரி 23, வெள்ளிக்கிழமை 2025 – இலங்கையின் மிகப்பெரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் கோப்பி உணவகச் சங்கிலிகளில் ஒன்றான பரிஸ்டா ஸ்ரீலங்கா, SOS சிறுவர் கிராமம் இலங்கை (SOS Children’s Villages Sri Lanka) அமைப்புடன் இணைந்து தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நடத்தப்பட்ட “Share a Meal” வருடாந்த பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதன் மூலம், சமூக மேம்பாட்டுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
“பரிஸ்டா ஸ்ரீலங்காவின் நோக்கம் என்பது எமது கோப்பி நிலையங்களுக்கு அப்பாற்பட்டு, நாம் சேவை செய்யும் சமூகங்கள் வரை விரிவடைந்துள்ளது.” என பரிஸ்டா ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான திலூப பத்திரண தெரிவித்தார். “Share a Meal போன்ற முன்முயற்சிகளின் ஊடாக, நாங்கள் அன்றாட வாடிக்கையாளர் ஈடுபாட்டை அர்த்தமுள்ள சமூக தாக்கமாக மாற்றுகிறோம். மேலும் பொறுப்புணர்வுடன் கூடிய வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக மேம்பாட்டிற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் தாராளமான பங்களிப்பின் மூலம், 2025 டிசம்பரில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியினால் 6.78 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் இலங்கையின் 6 SOS சிறுவர் கிராமங்களில் வசிக்கும் சுமார் 800 சிறுவர்களுக்கு 67,830 வேளை உணவுகளை வழங்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மனிதாபிமான செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, பரிஸ்டா குழுவினர் அண்மையில் SOS சிறுவர் கிராமத்திற்கு நேரில் சென்று சிறுவர்களுடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிட்டதுடன், ஒரு மாத காலமாகத் திரட்டப்பட்ட நிதியையும் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். இந்நிகழ்வில் SOS அமைப்பின் வர்த்தகநாம தூதுவரும், பிரபல பாடகியுமான உமரியா சின்ஹவங்ச, Barista Coffee Lanka மற்றும் SOS சிறுவர் கிராமங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த முன்முயற்சியின் விரிவான தாக்கம் குறித்து SOS சிறுவர் கிராமங்கள் – ஸ்ரீலங்காவின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரத்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “இப்பங்களிப்பானது வெறும் உணவோடு மட்டும் நின்றுவிடாமல், குழந்தைகளின் கல்விசார் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். இது அவர்களின் நீண்டகால வளர்ச்சிக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும்.” எனத் தெரிவித்தார்.
‘Share a Meal’ பிரச்சாரமானது, SOS சிறுவர் கிராமங்களுடன் பரிஸ்டா ஸ்ரீலங்கா கொண்டுள்ள நீண்டகால உறவைப் பிரதிபலிக்கிறது. SOS சிறுவர் கிராமங்கள் என்பது, பெற்றோரின் அரவணைப்பை இழந்த அல்லது அதனை இழக்கும் அபாயத்திலுள்ள குழந்தைகளுக்கு அன்பான இல்லம், கல்வி மற்றும் நீண்டகாலப் பராமரிப்பை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். இலங்கையில் சுமார் 800 குழந்தைகளுக்கு நற்பண்புகள், கௌரவம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி வளர்ப்பதன் மூலம், அவர்களின் வாழ்வில் ஒரு நிலையான தன்மையை அந்த அமைப்பு உறுதிப்படுத்தி வருகின்றது.
பரிஸ்டா ஸ்ரீலங்கா, அளிக்கும் மனப்பான்மையும் கருணையும் நிறைந்த உணர்வுடன் ஒன்றிணைந்து பங்களித்த ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

You must be logged in to post a comment.