Local

இலங்கையில் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல்?

பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : விரைவில் சட்டம் அமுல்!

பெற்றோர்களை பராமரிக்காத பிள்ளைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெற்றோரின் சொத்துக்களைத் தங்களின் பெயருக்கு உரிமையாக்கிக் கொண்டு பின்னர் அவர்களைக் கைவிட்டு முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிந்தூன் தெரிவித்தார்.

அவ்வாறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னர் அந்தப் பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும்.

இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திருத்தங்கள் தற்போது சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில பிள்ளைகள் பெற்றோரின் சொத்துக்களை மிக தந்திரமாக தங்கள் பெயர்களுக்கு மாற்றிக்கொண்டு பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதாகவும் கைவிடுவதாகவும் கிடைத்துள்ள முறைப்பாடுகளைக் கவனத்திற்கொண்டே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டதன் பின்னர் பெற்றோர்களைக் கைவிடுவதற்கு பிள்ளைகளுக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்காது என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோரின் பாதுகாப்பு அவர்களின் போஷணை மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக அவசரத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading