World

மத்திய கிழக்கில்.. பிரிட்டனின் வரலாற்று துரோகம்..!!

1917, நவம்பர் மாதம். உலக வரைபடம் ரத்தத்தாலும் ரகசியங்களாலும் மாற்றி வரையப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கொந்தளிப்பான காலகட்டம் அது.

சரியாக அந்தத் தருணத்தில், பிரிட்டன் ஏன் பாலஸ்தீனத்தை யூத மக்களுக்கு வழங்குவதாகத் திடீரென ஒரு பிரம்மாண்டமான சத்தியத்தைச் செய்தது?

இது தற்செயலானதா? நிச்சயம் இல்லை!

ஏனென்றால், மத்திய கிழக்கை பிரிட்டனும் பிரான்சும் தங்களுக்குள் ரகசியமாகப் பங்கிடப் போட்ட ‘சைக்ஸ்-பிக்கோ’ (Sykes-Picot) என்ற மெகா திட்டத்தை, ரஷ்யா ஒட்டுமொத்த உலகத்தின் முன்னால் போட்டுடைத்து அம்பலப்படுத்திய அதே பரபரப்பான விநாடியில்தான் இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டது

எல்லாவற்றிற்கும் மேலாக, இதில் மறைந்திருக்கும் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால்:

ஒரு ஒட்டுமொத்த நிலப்பரப்பையே தாரைவார்க்கும் அந்த வரலாற்று வாக்குறுதி, வேறு எந்தவொரு நாட்டின் அரசாங்கத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ வழங்கப்படவில்லை.

மாறாக, உலகையே தன் நிதி வலைப்பின்னலுக்குள் வைத்திருந்த ஒரு பெரும் செல்வந்தரான வங்கியாளர் Lord Rothschildற்கு எழுதப்பட்ட ஒரு சாதாரணத் தனிப்பட்ட கடிதமாக அனுப்பபட்டது.

“இது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு” என்று பிரிட்டன் உலகத்தை முட்டாள்கள் ஆக்கியது.

ஆனால் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்… சர்வதேச அரங்கில் பிரிட்டனின் இரட்டை வேடம் அம்பலமாகி, அதன் நம்பகத்தன்மை சுக்குநூறாக உடைந்து கொண்டிருந்த ஒரு நெருக்கடியான தருணம் அது.

அப்படிப்பட்ட நேரத்தில், ஒரு தேசத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சாசனம், ஏன் ஒரு தனிநபரின் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்?

அதிகாரத்தின் தாழ்வாரங்களில் எழுதப்பட்ட இந்த வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், அதன் திரைக்குப் பின்னால் உறைந்து கிடக்கும் உண்மைகள் வெறும் மர்மமானவை மட்டுமல்ல… உலகை இன்றும் ஆட்டிப்படைக்கும் இருண்ட ரகசியங்கள் என்ற உண்மை புலப்படும்.

முதல் உலகப்போரின் போது, பிரிட்டன் அரேபியர்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது: ஒட்டோமான் பேரரசுக்கு எதிராகப் போரிட்டால், போருக்குப் பின் சுதந்திர அரேபிய தேசம் உருவாக்கப்படும் என்பதே அது.

ஆனால், திரைக்குப் பின்னால் பிரிட்டனும் பிரான்சும் மத்திய கிழக்கை தங்களுக்குள் எப்படிப் பிரித்துக்கொள்வது என்று சைக்ஸ்-பிக்கோ (Sykes-Picot agreement-1916) என்ற ரகசிய ஒப்பந்தத்தைப் போட்டிருந்தன.

1917-ல் ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி (Bolshevik) வெடித்ததும், புதிய ரஷ்ய அரசாங்கம் ஏகாதிபத்திய நாடுகளின் இந்த ரகசிய ஒப்பந்தத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.

அப்போது தான் பிரிட்டனின் இரட்டை வேடம் வெளியானது;

அரேபியர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். சர்வதேச அரங்கில் பிரிட்டனின் நற்பெயரும் நம்பகத்தன்மையும் அதலபாதாளத்திற்குச் சென்றது.

இந்த நெருக்கடியான நிலையில்தான் Balfour Declaration என்ற அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதம் வெளியானது.

1917 நவம்பர் 2 அன்று, பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் Author James Balfour , பிரிட்டிஷ் யூத சமூகத்தின் முன்னணித் தலைவரும் பெரும் நிதியாளருமான Walter Rothschilds க்கு ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதினார்.

பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான ஒரு “தேசிய தாயகத்தை” நிறுவுவதற்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவளிக்கும் என்பதே அந்த 67 வார்த்தைகள் கொண்ட கடிதத்தின் சாராம்சம்.

அது ஏன் ஒரு அரசு அதிகாரிக்கோ, ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதிக்கோ எழுதப்படவில்லை?

ரோத்ஸ்சைல்டு குடும்பம் அன்றைய ஐரோப்பாவின் மிகப்பெரிய நிதி மற்றும் அரசியல் அதிகார மையமாக இருந்தது.

சியோனிச (Zionism) இயக்கத்திற்கு நிதி மற்றும் அரசியல் ஆதரவைத் திரட்டக்கூடிய சக்தி அவர்களிடம் இருந்தது.

பிரிட்டனுக்கு அந்த நேரத்தில் தேவைப்பட்டது மனிதாபிமானம் அல்ல; போரை வெல்லத் தேவையான நிதியும், சர்வதேச செல்வாக்கும் மட்டுமே.

பிரிட்டன் இதை யூத மக்கள் மீதான ‘அனுதாபம்’ மற்றும் ‘மனிதாபிமானம்’ என்று உலகுக்குக் காட்டியது.

ஆனால் உண்மை என்னவெனில் இதற்கு பின்னால் பிரிட்டனின் மூன்று நரித்தந்திரங்கள் ஒளிந்திருந்தன.

முதல் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம். அமெரிக்கா போரில் முழுமையாக இறங்கவும், ரஷ்யா போரிலிருந்து விலகாமல் இருக்கவும், அந்த நாடுகளில் உள்ள செல்வாக்கு மிக்க யூத சமூகத்தின் ஆதரவைப் பெறுவது பிரிட்டனுக்கு அவசியமாக இருந்தது. ஆகவே உலகளாவிய யூத ஆதரவை பெறும் தந்திரம் ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் Sykes-Pickt ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனத்தின் சில பகுதிகள் சர்வதேசக் கட்டுப்பாட்டிலோ அல்லது பிரான்ஸின் வசமோ செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் பிரிட்டனுக்கு பாலஸ்தீனத்தின் முழு கட்டுப்பாடும் தேவைப்பட்டது. யூதர்களுக்கு அங்கு தாயகம் அமைத்துத் தருவதாகக் கூறினால், பாலஸ்தீனத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடியும் என பிரிட்டன் கணக்கிட்டது.

மூன்றாவது காரணம் மிகமுக்கியமானது , பிரிட்டனின் “சாம்ராஜ்யத்தின் உயிர்நாடி” எனப்பட்ட இந்தியாவின் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாய்க்கு அருகில் உள்ள பாலஸ்தீனம் ஒரு முக்கிய அரணாக இருந்தது.

அங்கு தங்களுக்கு விசுவாசமான ஒரு சமூகம் ( இஸ்ரேல்) இருப்பது பிரிட்டனின் புவிசார் அரசியல் (Geopolitics) நலன்களுக்குச் சாதகமாக அமையும் என திட்டம் போட்டது.

அதிகாரமும், நம்பகத்தன்மையும் கைநழுவிப் போகும் தருணங்களில், ஏகாதிபத்தியங்கள் தங்களின் நலனைக் காக்க ‘மனிதாபிமானம்’ என்ற முகமூடியை அணிந்துகொள்வது வரலாற்றில் வாடிக்கையான ஒன்றுதான்.

அந்த 67 வார்த்தைகள் கொண்ட கடிதம் வெறும் காகிதம் அல்ல.

அது திருட்டு சைக்ஸ்-பிக்கோ(Sykes-Picot) ஒப்பந்தத்தின் அவமானத்தை மறைக்க, போரின் போக்கை மாற்ற, மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எல்லையை விரிவுபடுத்த வீசப்பட்ட ஒரு அரசியல் பகடைக்காய்.

ஒரு தேசத்தின் நிலத்தை, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் சம்மதம் இல்லாமல், மற்றொரு சமூகத்திற்கு வழங்குவதற்காக ஒரு வங்கியாளரிடம் கொடுக்கப்பட்ட அந்த வாக்குறுதிதான், இன்றும் மத்திய கிழக்கில் தீராத ஒரு மோதலாகத் தொடர்கிறது.

இன்று மத்திய கிழக்கில் தினமும் சிந்தப்படும் ரத்தத்திற்கும், தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் முடிவே இல்லாத போர் நெருக்கடிகளுக்கும் யார் காரணம் என்று தேடினால், அதன் ஒட்டுமொத்த சுட்டுவிரலும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைத்தான்.

அரபியர்களுக்கு ஒரு சத்தியம், பிரான்சுக்கு ஒரு ரகசிய ஒப்பந்தம், ஒரு யூத வங்கியாளருக்கு ஒரு நிலப்பரப்பு என பிரிட்டன் அடுக்கடுக்காக ஆடிய நாடகம் சாதாரண அரசியல் அல்ல; அது ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே ஈவிரக்கமின்றிச் சூறையாடிய பகிரங்கமான திருட்டு எனவே கூறவேண்டும்.

தங்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாத, தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு மக்களின் நிலத்தை, மற்றொரு சமூகத்திற்கு ஒரு கடிதத்தின் மூலம் தாரைவார்க்க பிரிட்டனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இது வெறும் வரலாற்றுப் பிழையல்ல; ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டத் திமிர். மனிதாபிமானம் என்ற போர்வையில் அவர்கள் செய்தது, உலகின் வளங்களை தங்களின் புவிசார் அரசியலுக்காகப் பங்கிட்டுக்கொண்ட ஒரு மாபெரும் கொள்ளை.

ஒரு பக்கம் பிரித்தாளும் சூழ்ச்சி, மறுபக்கம் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட வஞ்சகம், இன்னொரு பக்கம் பிறரின் தாய்நிலத்தைத் திருடிப் பரிசளித்த ஏகாதிபத்திய அகந்தை,
இவையே இன்றைய உலகை இருளில் தள்ளிய மூல காரணங்கள்.

தன்னுடைய சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள, உலக வரைபடத்தைத் தன் இஷ்டத்திற்குப் பிய்த்துப் போட்ட பிரிட்டனின் சுயநலமும், வரலாற்றுத் திருட்டுத்தனமுமே இன்றைய ஒட்டுமொத்த உலக நெருக்கடிகளுக்கும் முழு முதல் காரணம்.

காலம் மாறலாம், ஆனால் பிரிட்டன் உலக அரங்கில் அரங்கேற்றிய இந்த மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை வரலாறு என்றென்றைக்கும் மறக்காது; மன்னிக்கவும் செய்யாது!

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading