Local

ரணிலின் பதவியேற்பும் அரசியல் யதார்த்தமும்…!

ரணிலின் பதவியேற்பு
———————————
ரணிலின் பதவியேற்பிற்கெதிராக முன்வைக்கப்படுகின்ற பிரதான விமர்சனங்கள்:

  1. ரணிலின் கட்சியில் அவரைத்தவிர ஒரு ஆசனங்கூட இல்லை. எனவே, அவரின் நியமனம் அரசியலமைப்பிற்கு முரண்.
  2. அவர் ராஜபக்சக்களை பாதுகாகாக்கும் டீல் உடன்தான் பதவியேற்றிருக்கின்றார்.
  3. அவரும் ஒரு மத்தியவங்கித் திருடன்.
  4. அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.

இதில் முதலாவது விமர்சனம் முழுக்க, முழுக்கப் பிழை. அவருக்கு பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி கருதினால் போதும். பாராளுமன்றம் கூடியதும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. எதிர்க்கட்சிகள் விரும்பினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர சட்டத்தில் இடம் உண்டு. அப்பொழுதுதான் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இரண்டாவது விமர்சனம்.

நல்லாட்சிக்காலத்தின் ஆரம்பகாலத்தில் மைத்திரி, ராஜபக்சக்களை தண்டிக்க வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் ரணில் அவர்களைப் பாதுகாக்கவே முற்பட்டார்; என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! மைத்திரியின் தூண்டுதலினாலும் மக்களுக்கும் காட்டவேண்டும் என்பதனாலுமே சில நடவடிக்கைகள்கூட அவர்களுக்கெதிராக எடுக்கப்பட்டன. அவற்றிலும் திருப்தியடையாத மைத்திரி, சட்டம் ஒழுங்கு அமைச்சை என்னிடம் ஒரு 6 மாதத்திற்கு தந்துபாருங்கள்; என்றுகூட ஒரு கட்டத்தில் கேட்டிருக்கிறார்.

எனவே, ரணில் ராஜபக்சக்களைப் பாதுகாக்க முனைந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது ராஜபக்சாக்கள் மீதுகொண்ட அன்பினால் அல்ல. இரண்டு தடவைக்குமேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கமுடியாது; என்ற சரத்தை 19 இல் இணைத்து மஹித்த மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்தவரும் அவரே! 30 வயதை 35 ஆக உயர்த்தி அவருக்குப் பதிலாக அவரது மகனையும் ஜனாதிபதியாகாமல் தடுத்ததும் ரணிலே!

அதேபோல், அமெரிக்கப் பிரஜைகளான கோட்டா மற்றும் பசில் இருவருமே போட்டியிடமுடியாமல் இரட்டைப் பிரஜா உரிமை விடயத்தையும் கொண்டுவந்தவரும் அவரே. தனது பிரஜா உரிமையைத் துறந்து இறுதியில் நீதிமன்றம் சென்று போட்டியிடும் நிலையை அவர் உருவாக்கினார்; என்பது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டிராத ஒன்று. ஆனால், இயல்பாக ரணில் ஒருபோதும் ராஜபக்சாக்களுக்கு ஆதரவானவர் அல்ல.

அதேநேரம், அவர்களைத் தண்டிக்கும் விடயத்தில் மைத்திரிக்கு முரணான நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்ததற்கு காரணம் ராஜபக்சாக்கள் மீதான அன்பினாலல்ல, மாறாக அவரது பிரித்தாளும் தந்திரத்தினாலாகும். ஏனெனில் ரணிலிடம் முழுமையான பெரும்பான்மை இல்லாததினால் பெரமுனவிற்கும் மைத்திரி அப்போது தலைவராக மாறியிருந்த சூழ்நிலையில் ராஜபாக்சாகளை சிறைக்கு அனுப்பினால் பெரமுனவில் உள்ள மொத்த எம் பிக்களும் மைத்திரியின் கட்டுப்பாட்டில் வந்துவிடுவார்கள். மைத்திரி பலமடைந்துவிடுவார். அது தனது பதவிக்கு ஆபத்து.

எனவே, ராஜபக்சாக்கள், குறிப்பாக மஹிந்த வெளியில் இருக்கும்வரைதான் மைத்திரிக்கு சவால் இருக்கும். இருதரப்பும் பிரிந்திருக்கும் வரை தனக்கு சௌகரியமாக இருக்கும்; என்ற தந்திர அரசியல்தான் அது. மனிதன் ஒன்று நினைக்க இறைவன் ஒன்று நினைக்கிறான்; என்பதுபோல, அவரது தந்திரமே அவருக்கு பின்னர் வினயாக மாறியது வேறு விடயம்.

இவை ஒரு புறம் இருக்க, முழுமையான நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக கோட்டா இருக்க, பெரமுனவின் ஆசனப்பலத்தில் ரணில் தங்கியிருக்கும்போது ரணில் விரும்பினாலும் ராஜபக்சாக்களை ரணிலால் தண்டிக்க முடியாது. ஏன், சஜித் பிரதமராகி இருந்தாலும் இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை.

எனவே, ராஜபக்சாக்களைப் பாதுகாக்கவே ரணில் பிரமராகி இருக்கின்றார்; என்பது முழுக்க, முழுக்க கற்பனையாகும்.

ரணில் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதன்மூலம் ராஜபக்சாக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்களா?
———————————————————————-
இது விரிவாக ஆரயப்படவேண்டிய கேள்வி? இன்று நாட்டு மக்கள் பசியுடனும் பட்டினியுடனும் இருக்கும்போது எதற்கு முன்னுரிமை? என்ற கேள்வி இங்கு எழும்.

அந்தக் கேள்வியை ஒரு புறம் வைத்துவிட்டு யதார்த்தங்களுக்குள் நுழைந்தால்,

மஹிந்த ராஜினாமா செய்த சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு முன்னால் இருந்த தெரிவுகள்:

  1. பெரமுனவில் இருந்து ஒருவரை அல்லது 11 கட்சிகளில் இருந்து ஒருவரைப் பிரதமராக்குவது. அது மக்களுக்கு திருப்பதியைத் தராது. அதேநேரம், பொருளாதாரத்தை முன்னேற்றுவார்; என்று நம்பிக்கை வைக்கக்கூடிய ஒருவரும் இந்த அணிகளுக்குள் வெளிப்படையாக இல்லை.
  2. சஜித்தை பிரதமராக்க உள்ளூர விரும்பாவிட்டாலும் ஓரளவு மக்கள் பலம் கொண்டது சஜித் அணி என்ற வகையில் அவரைப் பிரதமராக்கினால் மக்களின் சினம் ஓரளவு தணியலாம். அதேநேரம், அவர் பொருளாதரத்தை முன்னேற்றுவதில் தோல்வி கண்டால் மக்களின் சினம் கணிசமான அளவு அவரை நோக்கித் திரும்பும். அரசியல் ரீதியில் அது ராஜபக்சாக்களுக்கு இலாபமாகும்.

அதேநேரம், சஜித் தனது பதவியையே பலிகொடுக்கக் கேட்டால் விட்டுக்கொடுக்க ஜனாதிபதி முன்வருவாரா? இரண்டு தடவை ஜனாதிபதியாகவும் அதற்குமுன் பிரதமராகவும் இருந்த மஹிந்தவிற்கு பிரதமர் பதவியையே விட்டுக்கொடுப்பதற்கு அவ்வளவு தயக்கம் இருந்தபோது ஜனாதிபதிப் பதவியை விட்டுக்கொடுக்க முன்வருவாரா? சஜித்தினுடைய கோணத்தில், மக்களுடைய கோணத்தில் மேலே கூறியதுபோன்று சஜித்தின் நிலைப்பாடு சரியாக இருக்கலாம். அது வேறுவிடயம். இந்நிலையில் ஜனாதிபதிக்கு முன்னால் இருந்த அவருக்கு ஆகக்குறைந்த பாதிப்பான அல்லது ஓரளவு பாதுகாப்பான தெரிவு ரணிலே!

மக்களின் கோணம்
—————————-
பொருளாதார சீரழிவு ஆரம்பித்ததிலிருந்தே பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரணிலே பொருத்தமானவர்; என்ற அபிப்பிராயம் மக்களிடம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அதேநேரம், பொருளாதார நிலை தொடர்பாக ரணில் கூறிவந்த எதிர்வுகூறல்கள் அனைத்தும் நிகழ்ந்தேறின. இந்நிலையில் ரணில் ஆட்சியைப் பாரமெடுத்திருப்பது மக்களுக்கு ஓர் ஆறுதலை வழங்கியிருக்கின்றது.
ரணிலுடைய கோணத்தில்
—————————————
ஐ தே கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனம்கூட மாவட்ட ரீதியில் பெறவில்லை. அதேநேரம் தனக்கு நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றமுடியும்; என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கின்றது. அவர் பிரதமர் பதவியை ஏற்று பொருளாதாரத்தை முன்னேற்றும் இலக்கில் வெற்றிபெற்றால் ஒரு புறம் மக்களை இன்றைய பசி, பட்டினியில் இருந்து விடுவித்ததாக இருக்கும். இன்று எல்லா அரசியல் கட்சிகளினதும் பிரதான இலக்கு அதுவாகத்தான் இருக்கவேண்டும். மற்றவை எல்லாம் அதற்கு அடுத்ததாகத்தான் இருக்கவேண்டும். ராஜபக்சாக்களைத் தண்டிப்பதாக இருந்தாலும் சரிதான். எதுவாக இருந்தாலும் சரிதான்.

இன்று ராஜபக்சாக்களை மொத்தமாக பதவியில் இருந்து அகற்ற மக்கள் துடிப்பதன் முதற்காரணம், இவர்களை பதவியில் இருந்து அகற்றினால்தான் தம் பசிதீர வழியேற்படும்; என்பதுதான். தமக்கு இந்த நிலையை ஏற்படுத்தியதற்கு அவர்களைத் தண்டிக்க வேண்டும்; என்பது அதற்கு அடுத்ததாகத்தான். இன்னுமொரு ஆட்சி வந்து பொருளாதாரத்தை முன்னேற்றாமல் ராஜபக்சாக்களை மட்டும் பதவி கவிழ்த்து தண்டித்துவிட்டால் மக்கள் பசி தீர்ந்துவிடுமா? நிச்சயமாக இல்லை. மக்கள் ராஜபக்சாக்களைத் துரத்தவேண்டுமென்பதே அந்தப்பசியினால்தான். அந்த புதிய ஆட்சியாளர்களையும் துரத்தத்தான் முயற்சிப்பார்கள்.

மறுபுறம் ரணில் பொருளாதாரத்தை முன்னேற்றினால் மக்களின் ஆதரவு அவருக்குப் பெருகும். அதன்மூலம் கடந்த தேர்தலில் மரணித்த அவரது கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வழியேற்படும். அதன்மூலம் ராஜபக்சாக்கள் மீதான மக்களின் கோபம் தணியலாம். அதன்மூலம் அவர்களது பதவி பாதுகாக்கப்படலாம். இங்கு எதற்கு முன்னுரிமை? மக்களின் பசியைப்போக்குவதா? மக்களைப் பட்டினியில்போட்டு ராஜபக்சாக்களைத் தண்டிப்பதா? ஆனால் ராஜபக்சாக்களை இன்னொரு தடவை அண்மித்த காலத்தில் ஆட்சிக்கு கொண்டுவருவார்கள்; என்பது ஓர் அதீத கற்பனை.

இன்று ரணில் பதவியைப் பாரமெடுத்ததில் இருந்து பொருளாதாரம் முன்னேறுவதற்கான சில சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் அவருக்கு சில கால அவகாசம் வழங்காமல் கட்சிகள் ரணிலுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும். அது தமது அரசியலுக்கு பாதிப்பாகிவிடும்; என்பதற்காக அரசியல் செய்ய முற்படுவது சரியல்ல.

ரணில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தாரோ இல்லையோ, அதைவிட பெரும் கொள்ளையடித்தவர்களை இந்நாட்டு மக்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறார்கள்.

அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்
——————————————————
இன்று சில கட்சிகளால் முன்வைக்கப்படும் மிகப்பெரிய விமர்சனம் ‘அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்’ என்பது.

இரண்டு வருடங்களுக்குமுன் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களையே, இன்னும் ஒரு தேர்தல் நடைபெறாமலேயே மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டார்கள்; என்ற முடிவுக்கு நாம் வரமுடியுமென்றால் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு இன்று மக்களின் செல்வாக்கு அதிகரித்திருக்கலாம்; எவ்வாறு நிராகரிப்பு.

அன்றைய 69 லட்சத்தை இன்று 0 என்கின்றோம். அதேநேரம் அன்றைய 0 வையும் இப்போதும் 0 என்கின்றோம். இது என்ன லொஜிக்?

எனவே, இந்த சந்தர்ப்பத்தில் யாரும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல் முடிந்தால் ஒத்துழைப்பு வழங்குங்கள். முடியாவிட்டால் உபத்திரவமாவது செய்யாமல் அவருக்கு சற்று கால அவகாசம் வழங்குங்கள். அப்படி வழங்கி அவராலும் பொருளாதாரத்தை முன்னேற்றமுடியாவிடில் அதன்பின் உங்கள் எதிர்ப்பினைக் காட்டுங்கள்.

நாட்டுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

நன்றி:Yls_hameed

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading