Jobs

Little Japan திட்டத்தின் கீழ் 250 ஜப்பானியர்கள் இலங்கைக்கு வருகை

 

லங்கைக்கு வந்த மிகப்பெரிய தனிப்பட்ட ஜப்பானிய சுற்றுலாக் குழு கடந்த (28) ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. “Little Japan ” திட்டத்தின் கீழ் 250 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர். இது இந்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Japan Returns to Sri Lanka என்ற தொனிப்பொருளின் கீழ் பல மாதங்களுக்கான திட்டமிடலின் வெற்றிகரமான விளைவாக அமைந்த இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வணிக மற்றும் மக்கள் உறவுகளைப் புதுப்பிக்கும் முக்கியமான மைல்கல்லாகக் குறிப்பிடப்படலாம். இலங்கை பாதுகாப்பான சுற்றுலா இடமாக ஜப்பானியர்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே உள்ள நம்பிக்கையை இது தெளிவுபடுத்துகிறது என்று ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். மேலும், இதன் மூலம் வரும் மாதங்களில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர்களான Arai Koyo (Sam San) இந்தப் பயணம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையான நட்புறவும் வளமான கலாசாரமும் இலங்கையில் உள்ளது. அதனால்தான் இப்போது இலங்கை குறித்து ஜப்பானில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜப்பானிய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தயார்நிலையில் உள்ளது என்பதை எங்களால் காண முடிகிறது. இலங்கை மீதான எங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய பெரும் சுற்றுலாக் குழுவினரை அழைத்து வர ஏற்பாடு செய்தோம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

Colombo International Airport Hotelஇன் தலைவர் கலாநிதி ருவான் பெரேரா அவர்களின் கருத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட Little Japan திட்டத்தின் கீழ் இந்த தூதுக்குழு இலங்கைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டமானது ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலதிபர்களை இலங்கையின் வணிகங்கள் மற்றும் மக்களுடன் இணைப்பதற்கு ஏற்பாடு செய்கிறது. பல ஆண்டுகளாக ஜப்பானில் வாழ்ந்து பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட கலாநிதி பெரேரா அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் 45 உறுப்பினர்களைக் கொண்ட வணிகக் குழுவுடன் ஆரம்பிக்கப்பட்ட “லிட்டில் ஜப்பான்” திட்டம், இன்று 250 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக வலுப்பெற்றுள்ளது.

துறைமுக, கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் துணை அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு அவர்களின் பங்கேற்பு மூலம் இந்தப் பயணத்தின் தேசிய முக்கியத்துவம் நன்கு வலியுறுத்தப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் மற்றும் சுற்றுலா உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் ஆதரவும் அதன் மூலம் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Little Japan என்ற திட்டத்தை இந்நாட்டில் செயல்படுத்துவதில் கலாநிதி ருவான் பெரேரா அவர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து துணை அமைச்சர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

250க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பம் குறித்து கருத்துத் தெரிவித்த Little Japan திட்டத்தின் நிறுவனர் கலாநிதி ருவான் பெரேரா அவர்கள், “இவ்வளவு பெரிய ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் குழு ஒரே நேரத்தில் இலங்கைக்கு வந்தது, ‘லிட்டில் ஜப்பான்’ திட்டத்திற்கும் ஜப்பானில் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையான உறவுகளின் விளைவாகும். இந்தப் பயணத்திற்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான சுற்றுலா மற்றும் வணிக நன்மைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதே எங்களின் அடுத்த இலக்காக உள்ளது” என்று தெரிவித்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள, ஜப்பானிய முதலீட்டைக் கொண்ட Colombo International Airport Hotel இந்த தூதுக்குழுவை வரவேற்க ஏற்பாடு செய்தது. மேலும், அது அவர்களின் பயணம் முழுவதும் முக்கிய தங்குமிடமாகவும் செயல்படும். இத்தகைய பெரிய அளவிலான சர்வதேச குழுக்களையும் தொழிலதிபர்களையும் இலங்கைக்கு வரவேற்பதில் இந்த விடுதி ஆற்றும் சிறப்பான பங்கு இதன் மூலம் நன்கு தெளிவாகிறது.

இந்த தூதுக்குழுவின் வருகையை முன்னிட்டு சிறப்பு ஊடகச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில், Little Japan திட்டத்தின் மற்றும் Colombo International Airport Hotelஇன் பிரதிநிதிகள் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை விளக்கினர். எதிர்வரும் ஆண்டுகளில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்த இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் அப்போது சுட்டிக்காட்டினர்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading