Local

கம்பனிகள் இழுத்தடிப்பு! முற்போக்கு கூட்டணியும் உடுப்புப்பிடி!!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் முடிவில் உறுதியாகவே நிற்கின்றோம்.

– என்று தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று மீண்டும் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளது.

எனினும், 750 ரூபாவுக்கு மேல் சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இழுத்தடித்துவருகின்றன. அரசாங்க  தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

இதனால், இன்றைய சந்திப்பும் இவ்வித இணக்கப்பாடுமின்றியே முடிவுக்கு  வந்தது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் , அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சு, பிரதமர் அலுவலகத்தில் இன்று ( 07) நடைபெற்றது.

அரசின்  சார்பில் பெருந்தோட்டக் கைத் தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கதொழில் அமைச்சர் ரவீ சமரவீர,  பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் ஆகியோரும், 

முதலாளமார் சம்மேளனத்தின் சார்பில் லலித் ஓபேசேகரகனிஷ்க வீரசிங்கசுனில் போலியந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்பில் கண்காணிப்பு தரப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன்எம். திலகராஜ் எம்.பி., அரவிந்தகுமார் எம்.பி., கூட்டணியின் பிரதி செயலாளர்  சண். பிரபா ஆகியோர் பங்கேற்றனர்.

இன்றைய சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட திலகராஜ் எம்.பி. கூறியவை வருமாறு,

” ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 750 ரூபாவுக்கு மேற்பட்ட எந்தவொரு கொடுப்பனவையும் வழங்குவதற்கு கம்பனிகள் தயாராக இல்லை. இன்றைய சந்திப்பிலும் இதே நிலைப்பாடு நீடித்தது.

அத்துடன், பிரதமர் மற்றும் விடயதானத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் முன்னிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதற்கு எமது அதிருப்தியை அரசிடம் வெளியிட்டோம்.

2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டஒப்பந்தத்தின் பிரகாரம்  நடைமுறையில் இருந்த வருகை கொடுப்பனவு 60/- வும் உற்பத்தி திறனுக்கான கொடுப்பனவு 140/- ரூபாவும் இம்முறை நீக்கப்பட்டுள்ளன.  இவை  இரண்டையும் அடிப்படை சம்பளமாக மாற்றப்பட்டுள்ளது.

மாறாக இம்முறை வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதமளவில் 600/- அடிப்படை சம்பளத்துடன் 940/- மொத்த சம்பளத்தினை வழங்க முடியும் என பெருந்தோட்ட கைத் தொழில் அமைச்சர் கூறியிருந்த போதும்

தற்போது 700/- அடிப்படை சம்பளமாக வழங்கப்பட்டுள்ள நிலையில் மொத்த சம்பளம் 750/- க்கு மட்டும்படுத்தப்பட்டுள்ளமை வேடிக்கையானது. 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் முன்வைத்த 940 /- க்கும் இப்போது வழங்கப்பட்டுள்ள 750/- க்கும் இடைப்பட்ட 

190/- ரூபா வுக்கு என்ன நடந்தது என  கூறும் பொறுப்பு பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கு உடையது என்கின்ற அடிப்படையில்

அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் உறுதியாக உள்ளோம்.

தோட்ட கம்பனிகள் கிலோவுக்கான கொடுப்பனவு 25/- ரூபா 40/- அதிகரிப்பினை காரணம் காட்டி அதில் தொழிலாளர் வரும்னம் ஈட்டலாம் என்ற வாதத்தை முன்வைத்தபோது

அது அடிப்படையில் பெருந்தோட்டத்துறை முகாமைத்துவ முறைமை மாற்றத்தின் ஊடாக இடம்பெற வேண்டுமே தவிர இரண்டு தொழிற்சங்கள் உடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் ஊடாக தீர்மானிக்க முடியாது. 

அத்துடன், அத்தகைய  முறைமை மாற்றச் செயற்பாடுகளை அரசாங்கம் அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். ஏனெனில் இந்த விடயங்கள் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை மீறக்கூடியது என்பதையும் எடுத்து கூறினோம். 

 எமது கூட்டணியின் அரசியல் நிலைப்பாடு தொழிலாளர்கள் தொடர்ந்தும் இன்றைய நிலையிலேயே இல்லாமல் அவர்கள் சிறு தோட்ட உடமையாளர்களாக வேண்டும் என்பதனையும் தெளிவு படுத்தினோம்.

பெருந்தோட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் அதனை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட போதும்

தற்போது எழுந்துள்ள சூழலில் அரசாங்கம் தற்காலிக தீர்மானம் ஒன்றை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பினை ஏற்க வேண்டும் எனும் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதோடு

அரசாங்கம் இதற்கு உறுதியான பதிலை வழங்கும் வரை எமது ஆதரவு பரிசீலனைக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்பதையும் தெளிவாக முன்வைத்துள்ளோம்.” என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading