LocalWorld

இந்தோனேசியாவில் சுனாமி ஊழித்தாண்வம்! 380 இற்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனீசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது.

மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடுவது போன்ற பல காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த மாதம் இந்தோனீசியாவின் மற்றொரு தீவான லோம்போக்கில் தொடர்ச்சியாக பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. குறிப்பாக ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மட்டும் அதிகபட்சமாக 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இந்தோனீசியாவின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

“தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேத விவரங்கள் சரிவர கிடைக்கவில்லை. சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை” என்று இந்தோனீசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுகரோஹோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

பெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

சுனாமி பெரியளவில் தாக்கிய பாலு என்ற பகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தகவல் தொடர்பும், உள்ளூர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் பாதிக்கப்பட்டிருந்தாலும், மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் இந்தோனீசிய அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் சுலாவெசி தீவின் மத்திய பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில்இ உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ஒரே மணிநேரத்தில் திரும்ப பெறப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சுலாவெசி தீவின் மத்திய பகுதியிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலு என்ற பகுதியில் எழுந்த சுனாமி அலைகள் அங்குள்ள மசூதி உள்பட பல கட்டடங்களை சூழ்வதை தற்போது வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.

நிலநடுக்கத்தை நீண்ட காலம் முன்பே கணிப்பது சாத்தியமா?
“குழப்பம் நிறைந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் மக்கள் இடிந்து விழுந்த கட்டடங்கள் மற்றும் தெருக்களில் ஓடி வருகின்றனர். மேலும்இ சுனாமி அலைகளால் அடித்துவரப்பட்ட கப்பல் ஒன்று கரையை தட்டியுள்ளது” என்று இந்தோனீசியாவின் வானிலை மற்றும் பூகோளவியல் அமைப்பின் தலைவர் தீவொரிடா கார்னவாட்டி கூறியுள்ளார்.

2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனீசியாவின் சுமத்ரா கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு மிகப் பெரிய நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட மிக மோசமான சுனாமியால் இந்தியப் பெருங்கடலில் 2.26 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 1.2 லட்சம் பேருக்கு மேல் இந்தோனீசியாவை சேர்ந்தவர்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading