Local

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் புலிகளுடன் தொடர்பு! – இப்படிக் கூறுகின்றது சு.கவின் சுயாதீன அணி

“பாதுகாப்புப் படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில், காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள். ஆயுத மோதலின்போதே புலிகள் காணாமல்போனார்கள். இவர்கள் குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி தெரிவித்துள்ளது.

“கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா அல்லது வேறு யாருமா என்று தெரியாது. ஆனால், இந்தக் காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என்று அனைத்துமே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவை எனவும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்ததாவது:-

போர்க் குற்றங்கள் குறித்த நடவடிக்கைகளில் இராணுவம் மீது கடுமையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்க வேண்டும் என்று வடக்கின் அரசியல்வாதியான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி கூறியது என்ன? அமெரிக்க இராணுவம் மீது எந்த சர்வதேச நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார். சர்வதேச நீதிமன்றம் இறந்துவிட்டது என்பதை தெரேசா மேயும் இதனையே கூறிவிட்டார்.

எமது நாட்டிலும் இராணுவம் மீதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீதும் இராணுவக் குற்றங்களை சுமத்தி தண்டிக்க முயற்சித்த சர்வதேச தலைவர்களே இன்று அவர்களின் நாட்டில் சர்வதேச நீதிமன்றத்துக்கு இடமில்லை என்று கூறிவிட்டனர். வடக்கின் அரசியல்வாதிகள் இப்போதாவது இந்தக் கருத்துக்களை விடுத்து நல்லிணக்கப் பயணத்துக்கு இடம் கொடுக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஏற்பட்ட சந்திப்பின் மூலமாக இந்த நாட்டில் மீண்டும் மக்களாட்சி அரசு உருவாகும் வாய்ப்பும் நம்பிக்கையும் எழுந்துள்ளன. அதனை தமிழ்த் தலைமைகள் சீரழித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading