Lead NewsNorth

திலீபன் நினைவேந்தல் நல்லூரில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பு (படங்கள் இணைப்பு)

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலில் 12ஆம் நாளான இறுதிநாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.

நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள திலீபன் உணவு ஒறுப்பு இருந்த இடத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் உட்பட பெருமளவானோர் பங்கேற்று தீபம் ஏற்றி நினைவேந்தலைக் கடைப்பிடித்தனர்.

அத்துடன், திலீபனின் தியாகத்துக்கு மதிப்பளித்து இருவர் பறவைக் காவடி எடுத்து தூபி முன்பாக வந்து இரண்டு காவடிகளும் ஒன்றிணைந்து அகவணக்கம் செலுத்தினர்.

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டத்தை இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் முன்னெடுத்திருந்தார்.1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் 12 நாட்கள் நடைபெற்று செப்டெம்பர் 26 ஆம் திகதி, திலீபனின் வீரச்சாவுடன் நிறைவுக்கு வந்திருந்தது.

12 தினங்களும் நீராகாரம் எதுவுமின்றி திலீபன் போராட்டம் நடத்தியிருந்தார். தியாக தீபத்தின் நினைவேந்தலில் அவர் வீரச்சாவடைந்த நாளான இன்று தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading