Lead News

தீர்வு இல்லையேல் நாடு முன்னேறாது! – ஜப்பான் தூதுவரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வை அடையாத பட்சத்தில் இலங்கை முன்னேறிச் செல்ல முடியாது எனவும், ஒரு செழிப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தவேண்டுமெனில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் அவர் இதனை எடுத்துரைத்தார்.

நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுது.

இதன்போது கருத்துரைத்த இரா. சம்பந்தன், இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படவேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை எனவும்,பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையைச் சந்தித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில் மக்களுக்கான சுதந்திரமும் மற்றும் அரச நிர்வாகங்களின் சுயாதீனமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், ஏற்ற காலத்தில் நியாயமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் கடந்தகால யுத்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் எனவும், துரதிஷ்ட்டவசமாக இன்றுவரை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை எனவும் கூறினார்.

ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாத பட்சத்தில் இலங்கை முன்னேறிச் செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தவேண்டுமேயாகில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் சம்பந்தன் எடுத்துரைத்தார்.

இலங்கை தொடர்பில் ஜப்பான் தொடர்ச்சியாகக் கொடுக்கும் அனைத்து ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்த இரா.சம்பந்தன், விசேடமாக இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியின் நட்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன், விசேடமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஜப்பான் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் அக்கறையோடு பங்காற்றும் என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading