அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிடியாணை!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குப் புதிய அகலமான உடற்பகுதி கொண்ட விமானங்களைப் பெற்றுக்கொள்வதில் இடம்பெற்ற சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி மற்றும் ஊழல் சம்பவம் தொடர்பான வழக்கில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகச் (CEO) செயற்பட்ட கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதில் முதலாவது சந்தேகநபரான கபில சந்திரசேன பிணையில் இருந்த போது உயிர்மாய்த்துக் கொண்டார்.
இவ்வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி என்பவருக்காக அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலா ரூ. 20 மில்லியன் (மொத்தம் ரூ. 40 மில்லியன்) சரீரப் பிணை வழங்கியிருந்தனர். இந்நிலையிலேயே, தலைமறைவாகியுள்ள இரண்டாவது சந்தேகநபரான சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பொலிஸ் (Interpol) மூலமாகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளை மீறியுள்ள சந்தேகநபர் சார்பாக வைப்பிலிடப்பட்ட பிணைப் பணத்தை அரசுடமையாக்குவதைத் தவிர்ப்பதற்கான காரணங்களை முன்வைப்பதற்காக அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையினாலேயே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதாகவும், அவரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினமே நடைபெறுவதாகவும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், பிணைப் பணத்தை அரசுடமையாக்குவது தொடர்பான காரணங்களை முன்வைப்பதற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து பிணையாளர்களுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டார்.
இதேவேளை, இவ்வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் சமீந்திர ராஜபக்ஷவிற்கும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜே.சி. வெலியமுன அறிக்கையின் (JC Weliamuna Report) பரிந்துரைகளுக்கு அமைய, 2018 ஓகஸ்ட் 03 ஆம் திகதி அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரண பொலிஸ் மாஅதிபரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், இந்த விமானக் கொள்வனவில் தொடர்புடைய ரோல்ஸ் ரொய்ஸ் (Rolls-Royce), எயர் பஸ் (Airbus) உள்ளிட்ட நிறுவனங்களின் கணக்குகள், ஆவணங்கள், கையொப்பங்கள் மற்றும் அட்டை இலக்கங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்குமாறும், அந்நிறுவனங்களின் அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You must be logged in to post a comment.