World

இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது: மோடி பெருமிதம்

இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 3 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர். அகௌரா – அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்பு, குல்னா – மோங்லா துறைமுக ரயில் பாதை, மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் அலகு – 3 ஆகிய மூன்று திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டங்களை தொடங்கிவைத்த பின்னர் பேசிய பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா – பங்களாதேஷ் இடையேயான நட்பின் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நான் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய – பங்களாதேஷ் ஒத்துழைப்புக்கு கிடைத்துள்ள மற்றுமொரு வெற்றியைக் கொண்டாடும் தருணம் இது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதிய உச்சங்களை தொடர்ந்து அடைந்த வண்ணம் உள்ளது. இந்தியாவும் பங்களாதேஷும் இணைந்து கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள், அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில்கூட நடந்தது கிடையாது.

பல பத்தாண்டுகளாக நிறைவேறாத எல்லை மறு சீரமைப்பு ஒப்பந்தம் இந்த 9 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது. அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இது வித்திட்டுள்ளது. கடல் எல்லை பிரச்சினையையும் நாம் தீர்த்திருக்கிறோம்.

கடந்த 9 ஆண்டுகளில், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவையும், இந்தியாவின் ஷில்லாங், அகர்தலா, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களையும் இணைக்கும் நோக்கில் 3 பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020 இல் இருந்து இரு நாடுகளுக்கு இடையே சரக்கு ரயில் போக்குவரத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே உலகின் மிகப்பெரிய கப்பலான கங்கா விலாஸ் கப்பலைத் தொடங்கியதன் மூலம், சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் நமது உள்நாட்டு வர்த்தகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள அகௌரா – அகர்தலா ரயில் இணைப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். பங்களாதேஷுக்கும் இந்தியாவின் வட கிழக்குக்கும் இடையேயான முதல் ரயில் இணைப்பு இது. விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்து பங்களாதேஷுடன் திரிபுரா நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. இதேபோல், மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் 2வது அலகு தொடங்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்கிறேன்.

அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி எனும் இந்திய அரசின் அணுகுமுறை அண்டை நாடான பங்களாதேஷுக்கும் பொருந்தும். பங்களாதேஷ் வளர்ச்சியின் மிகப் பெரிய பங்குதாரராக இந்தியா இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பங்களாதேஷுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அளித்திருக்கிறது. சாதனைப் பட்டியல் மிக நீண்டது. 3 திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்காக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading