Jobs

2027 ஹஜ் யாத்திரிகைக்கான வங்கியியல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமானா வங்கி மீண்டும் வங்கிப் பங்காளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது

 

2026 ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரிகையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வங்கியியல் ஏற்பாடுகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வழங்கியிருந்ததைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகைக்கான வங்கியியல் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமானா வங்கி மீண்டும் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நியமனமானது போட்டித் தன்மை மிக்க தெரிவு முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், ஹஜ் சுற்றுலா அமைப்பாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் உட்பட அனைத்துப் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய, பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் தடையற்ற வங்கியியல் தீர்வுகளை வழங்குவதில் வங்கியின் ஆற்றல் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றது.

இம்முயற்சியின் ஒரு பகுதியாக, அமானா வங்கி எதிர்பார்க்கப்படும் ஹஜ் யாத்திரிகர்களுக்காக ‘சிறப்பு ஹஜ் கணக்குகளை’ ஆரம்பித்து, நிர்வகிப்பதற்கு வசதியேற்படுத்தித் தரும். இதன் மூலம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியினுள் கட்டாய ஹஜ் தொடர்பான கொடுப்பனவுகளை நிறைவு செய்ய முடியும். நல்ஆளுமை, வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மேம்படுத்தப்பட்ட ஹஜ் நிர்வாகக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த சிறப்பு ஹஜ் கணக்கு அமைகிறது. இக்கணக்கு, ஹஜ் யாத்திரைக்குத் தெரிவு செய்யப்படும் சாத்தியமுள்ள யாத்திரிகர்கள், பாதுகாப்பான ஒப்பந்த ஏற்பாட்டின் மூலம் தங்களுக்கான கட்டாய முன்பணங்களை இலகுவாகச் செலுத்த வழிவகுப்பதுடன், முழுச் செயல்பாட்டிலும் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்கிறது. மேலும், யாத்திரிகர்கள் தங்களது புனிதப் பயணத்திற்காகக் காத்திருக்கும் காலத்தில் கூடிய இலாபத்தை ஈட்டும் வகையில், அதிக இலாபப் பகிர்வு விகிதத்தையும் பெற்றுக்கொள்வர்.

ஹஜ் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், யாத்திரிகர்களுக்கு கவர்ச்சிகரமான பிரத்தியேகமான அனுகூலங்களை அமானா வங்கி வழங்குவதுடன், அதில் யாத்திரிகர்களுக்கு பயனுள்ள பிரயாண சாதனங்கள், முன்னுரிமை அடிப்படையில் சவுதி ரியால் கொள்வனவுகளுக்கு சிறப்பு நாணயமாற்று வீதங்கள் மற்றும் யாத்திரிகையின் போது சவுதி அரேபியாவில் மேற்கொள்ளும் டெபிட் அட்டை கொள்வனவுகளுக்கு 10% cashback போன்ற சலுகைகள் வழங்கப்படும்.

இந்நியமனம் தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “ஹஜ் யாத்திரிகைக்காக, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நம்பிக்கையை வென்ற வங்கிப் பங்காளராக அமானா வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம். அமானா வங்கியின் நிறுவனப் பங்குதாரர்களின் ஊடாக மலேசியா போன்ற நாடுகளிலிருந்து எமக்குக் கிடைக்கும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், நல்ஆளுமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் உச்சகட்ட நிலையைப் பேணுவதுடன், பாதுகாப்பான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்குகிறோம்.” என்றார்.

பங்காண்மை தொடர்பில் DMRCA சுயாதீன ஹஜ் செயற்குழுவின் தவிசாளர் ரியாஸ் மிஹுலர் கருத்துத் தெரிவிக்கையில், “போட்டித் தன்மைமிக்க ஏலச் செயல்பாட்டைத் தொடர்ந்து, 2027 ஹஜ் யாத்திரைக்கான நமது வங்கிப் பங்காளராக அமானா வங்கியை மீண்டும் தெரிவு செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஹஜ் தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகளின் நிர்வாகத்தில் நல்ஆளுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலுப்படுத்தும் திணைக்களத்தின் நோக்கத்திற்கு ஆதரவளிப்பதில் வங்கி உயர்ந்த அளவிலான தொழில்முறை, வினைத்திறன் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான பங்கான்மையானது, பாதுகாப்பான மற்றும் சீராக நிர்வகிக்கப்படும் கட்டணச் செயல்பாட்டை உறுதி செய்வதுடன், எதிர்பார்க்கப்படும் யாத்திரிகர்களுக்கான அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading