சம்பள பாக்கி 10 ஆயிரம் ரூபாய்!எரிந்துபோன 24 கோடி ரூபாய் ஜவுளிகள்..!!
“வெறும் 10 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கி… ஆனால் அதற்காக எரிந்துபோனது 24 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள்!”
குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தின் சரோலி பகுதியில் உள்ள ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது.
ஜவுளிக் கடைகள் அடுத்தடுத்து அமைந்திருந்ததால், தீ வேகமாக அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் 4 பேருக்கு சொந்தமான 17 கடைகளில் இருந்த ஜவுளிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
மொத்தமாக சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் தீயில் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடை உரிமையாளர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.
பொலிஸார் முதலில் CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அப்பகுதியில் நடமாடியது தெரியவந்துள்ளது.
விசாரணையில் அவர் 33 வயதான வினோத் சாவ்லி என்பதும், தீயில் சேதமடைந்த கடைகளில் ஒன்றின் உரிமையாளரிடம் முன்னாள் அக்கவுண்டண்டாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை கைது செய்து விசாரித்தபோது, தீ வைத்ததை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் தகவலின்படி, வினோத் சாவ்லி மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றியுள்ளார்.
பின்னர் வேலைவிட்டு சென்ற நிலையில், தனக்கு வழங்க வேண்டிய 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பாக்கி இருந்ததாகவும், அதை பலமுறை கேட்டும் பணம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், உரிமையாளரின் கடைக்கு மட்டும் தீ வைக்க திட்டமிட்டதாக விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, பெட்ரோல் வாங்கிச் சென்று கடையின் குடோனில் தீ வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, தீ அருகிலிருந்த கடைகளுக்கும் பரவியது.
இதன் விளைவாக 17 கடைகளில் இருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்குப் பின்னர் பொலிஸார் தன்னை தேடுவதை அறிந்த அவர் ராஜஸ்தான் மற்றும் அயோத்திக்கு சென்றதாகவும், பின்னர் மீண்டும் சூரத்துக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கியால் ஏற்பட்ட கோபம்… இறுதியில் பல கோடி ரூபாய் இழப்பாக மாறியிருக்கிறது!
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

You must be logged in to post a comment.