இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு Uber ஆதரவளிக்கிறது
உலகளாவிய பயண முன்பதிவு மற்றும் விநியோகத் தளமான Uber, இலங்கையின் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் தனது வருடாந்த வழிகாட்டுதல் முயற்சியான Uber Springboard 2026-இன் வெற்றியாளர்களின் விபரங்களை இன்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சாதனை படைக்கும் வகையில் 150 விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, வெற்றி பெற்ற தொடக்க வணிக முயற்சி நிறுவனங்களான Thingsnode, MonChron மற்றும் NeuroFleets ஆகியவை, தற்போது இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தின் தொழில்நுட்ப சிறப்பு மையத்தில், Uber நிறுவனத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப மற்றும் வணிகத் தலைவர்களிடமிருந்து நேரடி வழிகாட்டுதலைப் பெறவுள்ளன.
தற்போது மூன்றாவது முறையாகவும் இடம்பெற்றுள்ள Uber Springboard நிகழ்வானது, நம்பிக்கையூட்டும் இலங்கை தொடக்க வணிக முயற்சி நிறுவனங்களை உலகளாவிய தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் இணைக்கும் ஒரு தளமாகத் தொடர்ந்து செயல்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, ஸ்தாபகர்களுக்குப் தயாரிப்பு மேம்பாடு, தொழில்நுட்பம், வணிக மூலோபாயம் மற்றும் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் நடைமுறை வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த ஆண்டு வெற்றியாளர்கள் சூழல்நேய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏற்பாட்டியல் ஆகிய துறைகளில் பணியாற்றி, இலங்கையின் புத்தாக்கமானது நாட்டைத் தாண்டியும் பரந்த அளவில் தொடர்புடைய சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன அவர்கள் கூறியதாவது: “துணிச்சலான சிந்தனைகளை உலகளவில் போட்டியிடும் திறன் வாய்ந்த வணிகங்களாக மாற்றக்கூடிய தொழில்முனைவோரால் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் வடிவமைக்கப்படும். தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் சர்வதேச வலையமைப்புகளுக்கான அணுகல் உட்பட, அந்த இலட்சியம் வெற்றிபெறுவதற்கான சூழலமைப்பை உருவாக்க உதவுவதே எமது பங்காகும். இந்த ஆண்டு Uber Springboard நிகழ்வுக்கு சாதனை படைக்கும் வகையில் 150 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருப்பது, இலங்கையிலிருந்து வெளிவரும் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் ஒரு அறிகுறியாகும். வெற்றி பெற்ற மூன்று தொடக்க வணிக முயற்சி நிறுவனங்களையும் நான் வாழ்த்துகிறேன். மேலும், இலங்கைத் திறமைகளை வளர்ப்பதிலும், நமது தொழில்முனைவோர்கள் தங்களின் உலகளாவிய இலட்சியங்களை அடைய உதவுவதிலும் Uber காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன்.”
Uber Springboard 2026 வெற்றியாளர்கள்
Thingsnode, மிகார அமிதோதன அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சூழல்நேய எரிசக்தி சார்ந்த சொத்துக்களைக் கண்காணித்து மேம்படுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயல்பாடுகளை மேலும் திறமையானதாக மாற்ற உதவுகிறது. அதன் தீர்வுகள் ஏற்கனவே 500 மெகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை ஆதரிக்கின்றன.
MonChron, 18 வயதான கனிது கந்தேபொல அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், உலகெங்கிலும் உள்ள உள்ளடக்க உருவாக்குநர்கள் எளிய உரையாடல்கள் மூலம் சிக்கலான பிந்தைய தயாரிப்புப் பணிகளைத் தன்னியக்கமயமாக்க இடமளிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவியொன்றின் மூலம் வீடியோ எடிட்டிங்கிற்குப் புதிய வடிவம் கொடுக்கிறது.
NeuroFleets, லாவண்யா ரத்னபாலா மற்றும் ரொபின்ரோய் பீட்டர் ஆகியோரால் இணைந்து ஸ்தாபிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட தொடக்க வணிக முயற்சி நிறுவனமாக, ஏற்பாட்டியல் அணிகளை ஒருங்கிணைக்கவும், மூன்றாம் தரப்பு ஏற்பாட்டியல் களஞ்சியசாலைகளில் ஏற்படும் செயல்தடை நேரத்தைக் குறைக்கவும் edge AI மற்றும் தன்னாட்சி வன்பொருளைப் பயன்படுத்துகிறது.
Uber Sri Lanka நிறுவனத்தின் விநியோக சேவைப் பிரிவுக்கான உள்நாட்டு முகாமயாளர் வருண் விஜேவர்தன கூறுகையில், “இந்த ஆண்டு வெற்றியாளர்களின் தனித்துவமாகக் காணப்படுவது, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னாட்சி தொழில்நுட்பம் முதல் சூழல்நேய எரிசக்தி வரையிலான எதிர்காலத்தை நோக்கிய துறைகளாகும். கொழும்புக்கு அப்பாலிருந்து புத்தாக்கங்கள் வெளிப்படுவதைக் காண்பதும் ஊக்கமளிக்கிறது, இது இலங்கை முழுவதுமுள்ள தொழில்முனைவோர் திறமையின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது. Springboard மூலம், இந்தத் திறமையை வளர்ப்பதற்கும், Uber நிறுவனத்தின் உலகளாவிய நிபுணத்துவத்தைப் பகிர்வதற்கும், நம்பிக்கைக்குரிய தொடக்க வணிக முயற்சி நிறுவனங்கள் இலங்கையிலும் அதற்கு அப்பாலும் விரிவடையக்கூடிய வணிகங்களை உருவாக்க உதவுவதற்கும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.”
Uber Sri Lanka நிறுவனத்தின் போக்குவரத்து சேவைப் பிரிவுக்கான உள்நாட்டு முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன கூறுகையில், “18 வயதே நிரம்பிய தொழில்முனைவோர் ஒருவர் ஏற்கனவே உலகளாவிய வாடிக்கையாளர்களுக்காக தொழில்நுட்பத்தை உருவாக்கும்போது, அது இலங்கையின் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களின் இலட்சியத்தையும் ஆற்றலையும் பறைசாற்றுகிறது. சிறந்த சிந்தனைகள் எங்கிருந்தும் வரலாம், ஆனால் அவற்றை வெற்றிகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு சரியான வழிகாட்டுதலும் வாய்ப்பும் தேவை. அந்தப் பயணத்தில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும், இலங்கைத் தொழில்முனைவோர் தங்கள் சிந்தனைகளை உள்நாட்டிலும் உலக அளவிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய கண்டுபிடிப்புகளாக மாற்ற உதவுவதற்காக எங்களுடன் கூட்டு சேர்ந்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க வணிக முயற்சி ஸ்தாபகர்கள், Uber நிறுவனத்தின் ஹைதராபாத் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல் அமர்வுகளில் பங்கேற்று, தயாரிப்பு மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் வணிக வளர்ச்சி குறித்து சிரேஷ்ட தலைவர்களுடன் கலந்துரையாடுவார்கள்.
இந்த மூன்றாவது பதிப்பு, Springboard நிகழ்வின் 2024 மற்றும் 2025 திட்டங்களின் தொடர்ச்சியாக, Uber நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் விநியோகம் சார்ந்த வணிகங்களுக்கு அப்பாற்பட்டு இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அதன் பரந்த பங்களிப்பை வலுப்படுத்துகிறது.

You must be logged in to post a comment.