Local

இலங்கையில் கடும் வரட்சியால் 82,000 பேர் குடிநீருக்கு அவதி

நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 82,000 பேர், குடிநீரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.நாட்டின் 24 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.

மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனைத் தவிர அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள தாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக குடிநீர் விநியோகத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை தீவிரமடையக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மாவட்டச் செயலாளர்களுக்கு முன்கூட்டியே விடுவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதற்கிணங்க குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் உடனடியாக சம்மந்தப்பட்ட பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading