இலங்கையில் டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி
மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.66 ரூபாவாகவும், விற்பனை விலை 341.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் நாட்டின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தற்போது பல்வேறு வங்கிகளின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 330.20 ரூபா முதல் 332.50 ரூபா வரையிலான விலை வரம்பில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை நாட்டின் சில உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலருக்கான கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளைக் குறிப்பிட்டிருந்த விபரம் பின்வருமாறு:
இலங்கை வங்கி – கொள்வனவு: ரூ. 332 | விற்பனை: ரூ. 341
மக்கள் வங்கி – கொள்வனவு: ரூ. 330.20 | விற்பனை: ரூ. 340.58
சம்பத் வங்கி – கொள்வனவு: ரூ. 332 | விற்பனை: ரூ. 341
கொமர்ஷல் வங்கி – கொள்வனவு: ரூ. 330.55 | விற்பனை: ரூ. 340.50
HNB – கொள்வனவு: ரூ. 332.50 | விற்பனை: ரூ. 340.75
செலான் வங்கி – கொள்வனவு: ரூ. 331.75 | விற்பனை: ரூ. 342
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.
2026 பெப்ரவரி பிற்பகுதியில் இருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட தாக்கங்களே இவ்வாறு ரூபாய் வீழ்ச்சியடைவதற்குக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபாய் மதிப்பில் 354 ரூபாவைத் தாண்டியிருந்தது. கடந்த மே மாதம் 12ஆம் திகதி அது 354.03 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.
இருப்பினும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த மாதம் தெரிவிக்கையில், தற்போதைய ரூபாய் வீழ்ச்சியானது 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது ரூபாய் வீழ்ச்சியடைவதற்குக் காரணம் உள்நாட்டு நிகழ்வுகள் அல்ல, உலகளாவிய சூழ்நிலைகளே என்று அவர் சுட்டிக்காட்டினார்.
2022 மார்ச்-ஏப்ரல் காலப்பகுதியில் ஏனைய பிராந்திய நாணயங்கள் ஸ்திரமாக இருந்தபோது, உள்நாட்டுக் காரணிகளால் இலங்கை ரூபாய் 370 ரூபா வரை வீழ்ச்சியடைந்திருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment.