இலங்கையில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்!!
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில் சேவையை புதிய முகத்துடன் முன்னெடுப்பது மற்றும் அது தொடர்பான திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (29.04.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கொழும்பு புறநகர் ரயில் திட்டம் (Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக பின்வரும் ரயில் பாதைகளில் மின்சார ரயில் சேவையை (Electric Rail Project) ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது:
களனிவெளி ரயில் பாதை: மருதானையிலிருந்து மாகும்புர வரை.
பிரதான ரயில் பாதை: கொழும்பு கோட்டையிலிருந்து ராகம வரை.
கடலோர ரயில் பாதை: கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரை.
இத்திட்டங்களுக்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தற்போதுள்ள ரயில் சேவைக்கு இணையாக மின்சார ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கும், தற்போதுள்ள அகலப் பாதை (Broad Gauge) முறைமைக்கு பதிலாக நியமப் பாதை (Standard Gauge) முறைமையின் கீழ் ரயில் பாதைகளை புனரமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நவீனமயமாக்கல் செயற்திட்டத்தை அடுத்த ஆண்டு (2027) ஆரம்பத்தில் தொடங்குவதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

You must be logged in to post a comment.