Local

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வென்ற கொலை குற்றவாளி – செயல்படுவதில் சிக்கல்

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என, இலங்கை சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை ரத்னபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு ரத்னபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2010 – 2015 காலப்பகுதியில், பிரேமலால் ஜயசேகர – பிரதியமைச்சராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் கடந்த பொதுத் தேர்தலிலே சிறைச்சாலையில் இருந்தவாறு, ரத்னபுரி மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாகப் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, 1,04,237 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இருந்தபோதும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டப்படி செயற்பட முடியாது என, சட்டமா அதிபர் தற்போது அறிவித்துள்ளார்.

முன்னதாக – சிறைச்சாலையில் உள்ள பிரேமலால் ஜயசேகர, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய நீதியமைச்சிடம் சிறைச்சாலைத் திணைக்களம் அனுமதி கோரியிருந்தது.

இதனையடுத்து, பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியுமா என, சட்டமா அதிபரிடம் நீதியமைச்சு ஆலோசனை கேட்டிருந்தது.

அதற்கு அமைவாகவே, பிரேமலால் ஜயசேகர சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, கடந்த 27ஆம் திகதிய நாடாளுமன்ற அமர்வின் போது, சிறைச்சாலை திணைக்களத்துக்கு சபாநாயகர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading