World

எரிவாயு வெடிப்பு! இந்தியா, பாகிஸ்தான் தொழிலாளர்கள் 13 பேர் பலி!!

கத்தாரில் இடம்பெற்ற எரிவாயு வெடிவிபத்தில் இந்திய, பாகிஸ்தான் தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழப்பு!

கத்தாரின் முக்கிய எல்.என்.ஜி (LNG) உற்பத்தி மையமான ராஸ் லாஃபான் (Ras Laffan) தொழிற்துறை நகரில் உள்ள பர்சான் (Barzan) எரிவாயு விநியோக தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு, இந்த எரிவாயு தளத்தில் உற்பத்தியை மறுதொடக்கம் செய்யும் பணிகளின் போது எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்தும் அதைத்தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. உடனடியாக விரைந்த அவசரக்கால மீட்புக்குழுவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதுடன், 66 பேர் காயமடைந்துள்ளதாக கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் கத்தார், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தான்சானியா, கென்யா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர். எனினும், யாருடைய காயமும் உயிருக்கு ஆபத்தானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விபத்தினால் கத்தாரின் எல்.என்.ஜி ஏற்றுமதியிலோ அல்லது ராஸ் லாஃபான் துறைமுக செயல்பாடுகளிலோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பணிகள் வழக்கம் போல் நடப்பதாகவும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading