கனிய வளத்துறையில் உச்ச பயன்களை ஈட்டிக்கொள்ள அமைச்சுக்கள் கூட்டிணைவு!

கனிய வளத்துறையின் உச்ச பயன்களை அடைந்து கொள்ளும் பொருட்டு சுற்றாடல் அமைச்சு மற்றும் கைத்தொழில், பெருந்தோட்டத்துறை அமைச்சு என்பன இணைந்து கூட்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான முக்கிய கூட்டம் அமைச்சர்களான நஸீர் அஹமட், ரமேஷ்பத்திரன ஆகியோரின் இணைத் தலைமையில் சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது.
கனிய வளங்கள் உள்ள பிரதேசங்களை அடையாளங்காணல், கனியவளத்துறையிலான முதலீடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு கருத்துரைத்த சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்ததாவது,
கனியவளத்துறையிலான முதலீடுகளால் உலகின் பல நாடுகள் வருமானத்தை அதிகரித்து, அந்நியச்செலாவணியை சேமிக்கின்றன. கனிய வளத் தொழில்துறையிலான பொறிமுறையை மேம்படுத்துவது அவசியம். இதற்கான காலங்கள் கனிந்துள்ளதால்,இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுவதில் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் பிரதான பங்காற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,சுற்றாடல் அமைச்சின் செயலாளர், கைத்தொழில் அமைச்சின் செயலாளர்,மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள்,புவியியல் சேவை கனியவளப் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் நிதியமைச்சை பிரதிநிதித்துவப்படுத்திய சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
