காரில் சீரழிக்கப்பட்ட 17 வயது சிறுமி முக்கியஸ்தர் மகனுக்கும் தொடர்பு?


இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பென்ஸ் காரில் 17 வயது சிறுமி ஒருவர் கும்பல் ஒன்றால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ ஒருவரின் மகன் உள்ளிட்ட 5 சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் சொகுசு காரில், 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு இலக்காகியுள்ளார். குறித்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காவல்துறையை நாடியதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து தற்போது பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை சீரழித்த ஒருவனை அடையாளம் காட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தக் கொடூரச் சம்பவத்தில், ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் மகன், மாநில சிறுபான்மை வாரிய தலைவரின் மகன் உள்ளிட்ட 5 சிறார்களுக்கு தொடர்பு உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமியை, பகல் சுமார் 5.30 மணியளவில் சிறார்கள் சிலர் வெளியே அழைத்து வந்து, சிவப்பு நிற சொகுசு காரில் கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமியின் வீட்டில் விட்டுவிடுவதாக கூறியே, அந்த சிறுவர்கள் காரில் சிறுமியை ஏற்றியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் ஏதுமற்ற பகுதிக்கு கொண்டு சென்று சிறுமியை சீரழித்ததுடன், தாக்கவும் செய்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சிறார்கள் அனைவரும் காரில் தப்பியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர்புடைய சிவப்பு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
