Lead NewsLocal

சம்பளப் பிரச்சினை: முக்கிய மூன்று அமைச்சர்களுடன் ஜனாதிபதி வெள்ளியன்று பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உயர்பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், பிரதித் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பிரதித் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், அரவிந்குமார், மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஶ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, சிங்.பொன்னையா, ஆர்.ராஜாராம், கே.டி.குருசாமி, எம்.உதயகுமார், எம்.ராம் உள்ளிட்ட கூட்டணியின் உயர்பீட உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உக்கிரமடைந்துவரும் நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாகவே இந்தச் சந்திப்பு அவசரமாக இடம்பெற்றுள்ளது எனக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் 1000/= அடிப்படை சம்பளமாக நாளாந்தம் அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தமது கோரிக்கை தொடர்பில் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனவே, அந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு வரும் பொருட்டே ஜனாதிபதியைச் சந்தித்தாகவும் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது எனத் தான் உணர்வதாகவும் நாளைமறுதினம் நிதி அமைச்சர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து விரைவான தீர்மானம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மலையக மக்களுக்காக நல்லாட்சி அரசு இதுவரை முன்னெடுத்த பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதிக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி நன்றி தெரிவித்ததோடு எதிர்வரும் காலத்திலும் நல்லாட்சி அரசுக்குத் தமது ஆதரவு கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டையும் வழங்கியதாகவும் தெரியவருகின்றது.

சம்பளப் பிரச்சினைக்கு மேலதிகமாக எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து அதிக நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்பதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகவும் கூட்டணி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading