தென்னாப்பிரிக்க அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றி!

மேற்கத்திய தீவுகள்-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும், 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டி.20 போட்டி நேற்று இரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டிகாக் 51 பந்தில், 5பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன் எடுத்தார். வெ.இண்டீஸ் பவுலர்கள் ஒபேட் மெக்காய் 4, டுவைன் பிராவோ 3 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய மேற்கத்திய தீவுகள் அணியில் எவின் லூயிஸ் 27, சிம்மன்ஸ் 22, நிகோலஸ் பூரன் 26, ரஸ்சல் 25 ரன் எடுத்தனர். ரபாடா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட 14 ரன்களே எடுக்க முடிந்தது. 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன் எடுத்த மேற்கத்திய தீவுகள் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 4 ஓவரில் 13 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் தப்ரெஸ் ஷம்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-1 என தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்க, 4வது போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது….
