Local

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் நிறைவு

வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் அகழப்பட்ட, 27.7 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

 

மகாவலி திட்டத்தின் இறுதி கட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், வடமத்திய மற்றும் வட மாகாணங்களின் குடிநீர் மற்றும் விவசாயம் உள்ளிட்ட நீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

 

கடந்த 1968ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டமானது, பின்னர் 1977ஆம் ஆண்டில் ‘முடுக்கப்பட்ட மகாவலி திட்டம்’ எனும் பெயரில் மிகவும் பரந்த அளவிலும் வேகமாகவும் செயல்படுத்தப்பட்டது.

 

அதன் இறுதி கட்டத்தின் ஒரு திட்டமாகவே, தெற்காசியாவின் மிக நீளமான இந்த நீர்ப்பாசன சுரங்கப்பாதை வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் அகழப்பட்டது.

 

இதன் அகழ்வுப் பணிகளுக்காக இரண்டு TBM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் முதற்கட்டம் 2022ஆம் ஆண்டில் அனுராதபுரம் – பலுகஸ்வெவ – மஹமீகஸ்வெவ பகுதியிலிருந்தும், இரண்டாம் கட்டம் 2023ஆம் ஆண்டில் பொலன்னறுவை – எலகஹர – கொந்துருவாவ பகுதியிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டது.

 

இதன் அகழ்வுப் பணிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததை ஒட்டி, அதனைத் திருவிழாவாகக் கொண்டாடும் நிகழ்வு இன்று காலை அனுராதபுரம், பலுகஸ்வெவ பகுதியில் நடைபெற்றது.

 

27.7 கிலோமீற்றர் நீளமுடைய இந்த நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் ஊடாக, வட மாகாணத்தின் 74,000 ஹெக்டேயர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன நீர் கொண்டு செல்லப்படவுள்ளது.

 

இதன் மூலம் ஒட்டுமொத்த வறண்ட வலய மக்களும் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த குடிநீர் பிரச்சினைக்குச் சாதகமான தீர்வு எட்டப்படும்.

 

அத்துடன், சுமார் 1.5 மில்லியன் மக்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ரஜரட்ட பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த இனம் காணப்படாத சிறுநீரக நோய்க்கும் இதுவொரு சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading