Local

நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் பதற்றம் 12 பேர் கைது!

பத்தரமுல்லை – பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழையும் பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு செல்லும் பிரதான வீதி இன்று காலை வீதித்தடைகளால் மறிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவ்விடத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு பின்னாலுள்ள மாதிவெல நுழைவாயிலை பயன்படுத்தினர்.

அப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதிலும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதாகைகளை ஏந்தியவாறு சிறிய எண்ணிக்கையிலானோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், பத்தரமுல்லை தியத்த உயனவிற்கு அருகில் பொல்துவ சந்தியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்விடத்தை கடந்து சென்ற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவ்விடத்துக்கு வந்த கலகமடக்கும் குழவினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.

தாம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தவிர வேறு எந்த செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவருடனான குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்ய முயன்ற வேளையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பொலிஸ் பஸ்ஸொன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading