Local

புதிய ஏற்றுமதி துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு!

 

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், தற்போதுள்ள விவசாய ஆய்வு நிறுவனம் மறுசீரமைத்து, நவீனமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற 25 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

யுத்தம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வாய்ப்பு கிட்டியது இருப்பினும் அந்த நேரத்தில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பொருட்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது. இன்று சிங்கப்பூர், மலேசியா, இந்துநேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் எம்மை கடந்துச் சென்றுள்ளன.

அதனால் இதுவே நமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். கடந்த நெருக்கடியான காலத்தில் இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் பலரும் நாட்டை விட்டுச் சென்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்பினாலும் அவர்களுடைய இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இலங்கைக்கு வரப்போவதில்லை.

அவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண வரவு செலவுத் திட்ட இடைவெளி, வர்த்தக நிலைமை என்ற இரண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தாக்கம் செலுத்த கூடியவையாகும். வரவு செலவுத் திட்ட இடைவெளி தொடர்பில் அவதானம் செலுத்தும் போது வரி வருமானத்தை அதிகரித்து கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது பணம் அச்சிட முடியாது. வெளியிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

இம்முறை வரவு செலவுத் திட்டமே நாம் கடன் பெற்றுக்கொள்ளாத முதலாவது வரவு செலவுத் திட்டமாகும். நாம் கடன் பெற்றுக்கொள்ளாமல் எமது செலவுகளை இவ்வாறு நிவர்த்திப்பது. அதற்காக “வற்” வரியை அதிகரிக்க நேரிடும். அதற்காக எம்மை விமர்சித்தாலும் எதிர்காலத்தில் அதுபற்றிய புரிதல் ஏற்படும்.

அத்தோடு நமது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். தொழிற்சாலைத் துறையினையும் வலுவூட்ட வேண்டும். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முதல் முறையாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய வலுவூட்டலுக்காக தேசிய வலுவூட்டல் ஆணைக்குழுவை நிறுவ எதிர்பார்க்கிறோம். அதேபோல் ஏற்றுமதிக்கு ஒத்துழைப்பு கைக்கொடுப்பதற்கான பல்வேறு துறைகள் காணக்கின்றன.

ஆனால் தற்போதுள்ள ஏற்றுமதித் துறைகளை மேம்படுத்துவது மாத்திரம் இதற்கு போதுமானதாக இருக்காது. புதிய ஏற்றுமதி துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்குப் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனுராதபுரம் காலத்திலிருந்து இலங்கை விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றது. முதலில் அரிசி பின்னர் பலசரக்குப் பொருட்கள், குறிப்பாக கறுவா, அதைத் தொடர்ந்து தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது, ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை இதைத் தொடர்ந்தோம். ஆனால் நாம் தொடரந்தும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக இல்லை. ஆனால் இது நமக்குப் பரிச்சயமான துறை. இலங்கையின் மூலதனத் தளம் வர்த்தகத்திலிருந்து அன்றி, விவசாயத்தில் இருந்தே கட்டியமைக்கப்பட்டுள்ளது.

அதற்கான திறன் எம்மிடம் உள்ளது. எனவே, நாம் அதிலிருந்து விலகி இருக்கக் கூடாது. விவசாயத்திற்குத் தேவையான நிலத்தை இப்போது நீங்கள் தேடிக்கொள்ளலாம். மேலும், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் இணைக்கப்படுவதால், இளைஞர்களும் அதில் இணைவார்கள் என நம்புகிறோம். இலங்கையில் விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம், தற்போதுள்ள விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. நீங்களும் இதற்கு ஆதரவு வழங்கலாம். இந்தச் செயற்பாடுகளை தொடருமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.”என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading