Cinema

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கும் நடிகர்!


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன.

ஆனால் ஆன்லைன் வகுப்புகளை கற்க ஸ்மார்ட் போன்கள் இல்லாத நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரும் அவதியடைந்து வருவதாகவும், ஒரு சில இடங்களில் வகுப்புகள் புரியாததால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தாலும், ஒரு சில பள்ளிகளில் தொடர்ந்து பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் தவித்து வந்த ஏழை மாணவர்களுக்கு இந்தி நடிகர் சோனு சூட் ஸ்மார்ட் போன்கள் வழங்கியுள்ளது அப்பகுதி மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள மோர்னி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோரிடம் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஸ்மார்ட் போன்கள் இல்லாததால், ஸ்மார்ட் போன் வைத்துள்ள பிற மாணவர்கள் வீட்டுக்குச் சென்று ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் சூழல் உள்ளதால், மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.

நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த செய்தியைப் பார்த்த இந்தி நடிகர் சோனு சூட், தனது ட்விட்டரில், ‘‘இனி அந்த மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டி இருக்காது. அவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கிடைத்துவிடும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோனு சூட்டின் நண்பர் கரண் கிலோட்ரா என்பவர் ஸ்மார்ட் போன்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நேற்று காலை வழங்கியதையடுத்து, அந்த செல்போன்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதை பெற்றுக் கொண்ட அப்பகுதி மாணவர்கள், ஸ்மார்ட் போன்கள் மூலம் சோனு சூட்டுடன் காணொலிக் காட்சி மூலம் பேசி நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோனு சூட், ‘‘ஹரியாணா பள்ளி மாணவர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதைப் பார்க்கும் அற்புதமான நாளாக இன்று தொடங்கியது. மாணவர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading