மாணவியை ஆபாச படம் எடுத்த மாணவனை கூலிப்படையை ஏவி கொன்ற மாணவிகள்!

பள்ளி மாணவியை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவனை, பத்தாம் வகுப்பு மாணவிகள் கூலிப்படையை ஏவி கொன்று புதைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியான பெரிய ஒபுளாபுரம் அருகே ஏரிக்கரையோரத்தில் உள்ள குப்பை மேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக மண்ணில் அடையாளங்கள் உள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கொலை வழக்குப் பதிவு செய்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில் ஓட்டேரி காவல் நிலையத்திலிருந்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த தகவல் புதிய திருப்புமுனையாக மாறியது.
கொலை செய்யப்பட்ட இளைஞர் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பதும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிரேம்குமாருக்கு வண்டலூர் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுடன் கடந்த ஒன்றரை வருடமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவிகளுடன் அடிக்கடி தனிமையில் இருந்த பிரேம்குமார் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவிகளிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மிரட்டலுக்கு பயந்து ஒன்றரை லட்சம் வரை பணம் கொடுத்த மாணவிகள் அதற்கு மேல் கொடுக்க மனமின்றி மாணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி முகநூலில் அறிமுகமான் தன் நண்பர் அசோக்குமார் என்பவரின் உதவியுடன் கூலிப்படையை நாடிய மாணவிகள் பிரேம்குமாரை கொல்ல திட்டம் தீட்டினர். கடந்த வியாழக்கிழமை பிரேம் குமாரை தொலைபேசியில் அழைத்த மாணவிகள் கேட்டபடி பணம் தருவதாகவும் எளாவூர் சோதனை சாவடி அருகே வருமாறும் கூறியுள்ளனர்.
அதனை நம்பி தனது நண்பர் பிரவீனுடன் அங்கு சென்ற பிரேம்குமாரை கூலிப்படையினர் சுற்றி வளைத்தனர். பிரேமை இரு சக்கர வாகனத்தில் வைத்து 2 நாட்களாக சித்ரவதை செய்து மண்வெட்டியால் வெட்டி கொன்றுள்ளனர்.
அதன் பிறகு உடலை அந்த பகுதியில் குப்பைமேட்டில் புதைத்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
