Local

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்! – சபாநாயகர் வலியுறுத்து

இனவாதம், மதவாதம் போன்ற தீயை உருவாக்க முயன்று வருபவர்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் தீ மூட்டுபவர்களாவர் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இவ்வாறான நடவடிக்கையின் மூலம் எதிர்கால சந்ததியினரின் எதிர்கால வாழ்வை 1983ஆம் ஆண்டில் இடம்பெற்றதைப் போன்று மீண்டும் ஒரு கறுப்பு யுகத்துக்கு இட்டுச் செல்ல வேண்டாம்.

வன்முறைகளினால் நாடு மீண்டும் பாதாளத்தை நோக்கியே செல்லும். நாட்டுப் பற்றுள்ள எவரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள்.

பாரம்பரிய இஸ்லாமிய பெண்களின் உடைகள், மதரசா கல்வி நிறுவனங்கள் என்பன தொடர்பான நெருக்கடிகளுக்குத் தெளிவான இணக்கப்பாடு எடுக்கப்பட்டுள்ளன.

விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ள இவ்வாறான விடயங்களை எதிர்வரும் வாரங்களில் தீர்த்துக்கொள்ள முடியும்.

நீதி, கல்வி, உயர்கல்வி ஆகிய அமைச்சுக்கள் இவை தொடர்பான சட்டங்களை வகுத்து வருகின்றன.

வன்முறைகள் சார்ந்த செயற்பாடுகளினால் மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகளிலும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

பயங்கரவாதச் செயற்பாடுகளின் பின்னணியில் திட்டமிட்ட குறுகிய நோக்கங்கள் இருக்கின்றமை தெளிவாகின்றது” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading